புதுடெல்லி: கடந்த சில ஆண்டுகளாக இந்தியா-ஜப்பான் இடையிலான உறவுகள் நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தோ-பசிபிக் பகுதியில் உத்திபூர்வ நிலைப்புத்தன்மையை வலுப்படுத்துவதுடன் உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கும் இந்தியா-ஜப்பான் உறவுகள் மாபெரும் பங்களிப்பை வழங்குவதாக டெல்லியில் நடைபெற்ற இந்தோ பசிபிக் மாநாட்டில் உரையாற்றியபோது அவர் குறிப்பிட்டார்.
சுதந்திரமான இந்தோ-பசிபிக் பகுதியைப் பேணுவது அவசியம் என்று குறிப்பிட்ட அவர், இது மிகவும் சவால் நிறைந்தது என்றார்.
இரு தரப்புக்கும் இடையேயான உறவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஜப்பான் பிரதமர் சனாய் தகாய்ச்சி பதவியேற்றபோது அவருடன் பிரதமர் மோடி மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்தான் அதற்கான சான்று,” என்றார் அமைச்சர் ஜெய்சங்கர்.
உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்ப இந்தியா-ஜப்பான் இருதரப்பு உறவு தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இருதரப்புக்கான ஒத்துழைப்பு பல்வேறு துறைகளில் விரிவடைவதாகக் கூறினார்.
கோலாலம்பூரில் நடந்த ஆசியான் உச்ச நிலை மாநாட்டின்போது ஜப்பானின் வெளியுறவு அமைச்சரைச் சந்தித்திருந்தார் ஜெய்சங்கர்.
அப்போது இருதரப்பினரும் விரைவில் இரு நாடுகளும் பல்வேறு அம்சங்கள் தொடர்பான விரிவான மதிப்பாய்வு நடத்த ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தார்.
இந்தியாவும் ஜப்பானும் செயற்கை நுண்ணறிவு, பகுதி மின்கடத்தி, முக்கியக் கனிமங்கள், விண்வெளி போன்ற துறைகளில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
இரு முக்கிய ஜனநாயக மற்றும் கடல்சார் நாடுகளாக இந்தோ-பசிபிக் பகுதிக்கு இந்தியாவும் ஜப்பானும் அதிகமான பொறுப்புகளைக் கொண்டுள்ளதாகவும் இரு நாடுகளும் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் திரு ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இதன்மூலம் உத்திபூர்வ, விரிவான தன்மையை மீண்டும் இருதரப்பும் உறுதிப்படுத்துவதாக அவர் மேலும் கூறினார்.

