கோலாலம்பூர்: இந்திய மத்திய வங்கியும் (ஆர்பிஐ) மலேசிய மத்திய வங்கியும் (பிஎன்எம்) உள்ளூர் நாணயத் தீர்வுகளைச் செயல்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடுக்கிவிட்டுள்ளன.
இருதரப்பும் இவ்விவகாரத்திற்கு முன்னுரிமை அளித்துவருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் (கிழக்கு) பி. குமரன் தெரிவித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் கோலாலம்பூரில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 8) சந்தித்துப் பேசியபோது, அந்த நடைமுறைக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்ததாகவும் அவர் சொன்னார்.
“பணம் செலுத்துவதற்கு உள்ளூர் நாணயத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் இன்னும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இருநாட்டு மத்திய வங்கிகளும் அப்பேச்சுவார்த்தையைத் தொடரும்,” என்று திரு குமரன் கூறினார்.
அம்முறையைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர இருநாட்டு அதிகாரிகளும் மிகத் தீவிரமாகப் பணியாற்றுவர் என்றும் அவர் சொன்னார்.
மின்னிலக்கக் கட்டணமுறை: முக்கிய உடன்பாடு
இதனிடையே, கியூஆர் குறியீட்டு அடிப்படையில் எல்லை தாண்டியும் கட்டணம் செலுத்தும் வசதி தொடர்பில் இந்தியாவின் என்ஐபிஎல் - மலேசியாவின் பேநெட் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதன்மூலம் இருநாட்டு மக்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு மேம்படும் என்று திரு குமரன் தெரிவித்தார்.
அதே நேரத்தில், இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண இடைமுக (யுபிஐ) இணைப்பை முழுமையாகச் செயல்படுத்துமுன் பல தொழில்நுட்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், “விற்பனையிட இயந்திரங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். வணிகர்களுக்கு இடையே ஒத்துழைப்பு எட்டப்பட வேண்டும். அப்போதுதான் சுற்றுப்பயணிகளும் வருகையாளர்களும் அந்த இணைப்பைத் திறம்படப் பயன்படுத்த முடியும்,” என்று திரு குமரன் சொன்னார்.
யுபிஐ - சிங்கப்பூரின் பேநவ் கட்டண முறைகளை இணைக்க கிட்டத்தட்ட ஓராண்டு தேவைப்பட்டது எனக் குறிப்பிட்ட அவர், ஆயினும் அந்த இணைப்புமுறை தற்போது மிகச் சிறப்பாக வேலை செய்வதையும் சுட்டிக்காட்டினார்.
திரு குமரன் முன்னர் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் இவ்வட்டாரத்தைச் சேர்ந்த பிற நாடுகளுக்குமான ‘புராஜெக்ட் நெக்சஸ்’ எனும் பன்முனைக் கட்டண இணைப்புத் திட்டம் தொடர்பில் பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

