புதுடெல்லி: இந்தியப் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆவலுடன் இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அதிபர் டிரம்ப்புடன் இணைந்து பணியாற்ற இந்தியாவும் தயாராக இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நட்பு நாடுகள், இயற்கையான கூட்டாளிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் இந்திய இறக்குமதிகளுக்கு 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இருதரப்பு உறவுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணும் எனப் பல்வேறு தரப்பினரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இருதரப்பு பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமான பலன்களைத் தரும் என திரு டிரம்ப் தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக, தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பிரதமர் மோடி தமது மிக நல்ல நண்பர் என்றும் அவருடன் வரும் வாரங்களில் பேசுவதற்கு ஆவலுடன் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட இரு பெரிய நாடுகளும் ஒரு வெற்றிகரமான முடிவை எட்டுவதில் எத்தகைய சிரமமும் இருக்காது என்றும் திரு டிரம்ப் கூறியுள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் இந்தியா எண்ணெய் வாங்குவது அமெரிக்காவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்தியப் பொருள்களுக்கு அந்நாடு ஏற்கெனவே விதித்த 25% வரியுடன் கூடுதலாக 25% அபராதம் விதித்துள்ளது.
இதையடுத்து, இருதரப்பு உறவிலும் உரசல்கள் ஏற்பட்ட நிலையில், ‘இந்திய-அமெரிக்க உறவு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று’ என இவ்வாரத் தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் சுட்டிக்காட்டி இருந்தார்.
“இரு நாடுகளுக்கும் இடையிலான வணிகப் பேச்சுவார்த்தைகள் இந்தியா-அமெரிக்க பங்காளித்துவத்தின் வரம்பற்ற திறனை வெளிப்படுத்த வழிவகுக்கும். இரு நாடுகளைச் சேர்ந்த வணிகக் குழுக்களும் வரி தொடர்பான பேச்சுகளை விரைவில் முடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளன,” என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இருதரப்பு உறவுகளையும், விரிவான உத்திபூர்வ பங்காளித்துவத்தையும் முன்னோக்கி நகர்த்திச் செல்வதில் தீவிர கவனம் செலுத்துவதாகவும் திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
திரு டிரம்ப், அவரது ஆலோசகர் பீட்டர் நவேரா என மாறி மாறி இந்தியாவை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், டிரம்பின் அண்மைய பேச்சுகள், பதிவுகள் அவர் இந்தியாவிடம் இறங்கி வருவதைக் காட்டுகின்றன.
இந்தியா, சீனா, ரஷ்யா நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள வலுவான கூட்டணி, டிரம்பின் போக்கை மாற்றியுள்ளது.
இதுவரை இந்தியா - பாகிஸ்தான் போர் உள்பட ஏழு போர்களை நிறுத்தியுள்ளேன் என்று கூறிவரும் டிரம்ப்புக்கு ரஷ்யா- உக்ரேன் போரை நிறுத்துவது அவரது, ஆளுமையை உலக அரங்கில் உறுதிப்படுத்துவதுன் அமைதிக்கான நோபல் பரிசையும் உறுதிப்படுத்தும் என்று நம்புகிறார். அதற்காகவே மிரட்டல்கள், சலுகைகள், சமரசங்கள், விட்டுக் கொடுத்தல் என்று எல்லா வழியிலும் அவர் முயற்சி செய்து வருகிறார் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவுக்கும் இந்தியா, சீனா, ரஷ்யா நாடுகளுக்கும் இடையிலான ஆடு புலி ஆட்டத்தின் முடிவு கணிக்கமுடியாததாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்