புதுடெல்லி: இந்தியா, அடுத்த தலைமுறை அணுவாற்றல் கொண்ட நீர்மூழ்கிப் போர்க்கப்பல்களை உருவாக்கும் திட்டத்திற்கு அக்டோபர் 10ஆம் தேதி அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கு ஏறக்குறைய 450 பில்லியன் ரூபாய் (7 பில்லியன் வெள்ளி) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் இருப்பு அதிகரித்துவரும் நிலையில் இந்தியா அதன் ராணுவத்தை நவீனப்படுத்துவதில் முனைந்துள்ளது. குறிப்பாகக் கடற்படைத் திறனையும் உள்நாட்டு ஆயுதத் தயாரிப்புத் திறனையும் மேம்படுத்துவதில் அது கவனம் செலுத்துகிறது.
எனவே, இந்தியக் கடற்படை இரண்டு அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிப்பதற்குப் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
370க்கும் மேற்பட்ட கப்பல்களுடன் உலகின் ஆகப் பெரிய கடற்படையைக் கொண்டுள்ளது சீனா. இதனால் இந்தியா தன் பாதுகாப்பு குறித்துக் கவலைப்படுகிறது.
அணுவாற்றல் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் ஓசையின்றி, விரைந்து செல்லக்கூடியவை. நீண்ட நேரம் நீருக்கடியில் இருக்கக்கூடியவை என்பதால் இவற்றைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். ஆகையால் உலகின் ஆகச் சக்தி வாய்ந்த கடற்படை ஆயுதங்களாக இவை கருதப்படுகின்றன.
இத்தகைய நீர்மூழ்கிக் கப்பல்களைத் தற்போது சீனா, ஃபிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா உட்பட ஒரு சில நாடுகளே தயாரித்துவருகின்றன.
இதற்குமுன் இந்தியா ரஷ்யாவிடமிருந்து இத்தகைய நீர்மூழ்கிக் கப்பலைக் குத்தகைக்கு எடுத்திருந்தது.
தொடர்புடைய செய்திகள்
புதிய அணுவாற்றல் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்தியாவின் விசாகப்பட்டினத்திலுள்ள அரசாங்கக் கப்பல் கட்டுமிடத்தில் உருவாக்கப்படும்.

