தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயற்கை மழைத் திட்டம்

2 mins read
e71ae441-814b-4c85-881e-bfd6516f5e62
ஆந்திராவில் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு. - படம்: ஊடகம்

புதுடெல்லி: அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் செயற்கை மழைத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் நாட்டின் எந்தப் பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படாது என்றும் புவி அறிவியல் அமைச்சின் செயலாளர் திரு.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

“செயற்கை மழையைத் தேவைப்பட்டபோது உண்டாக்கவும் நிறுத்தவும் முதற்கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

“இன்னும் 18 மாதங்களில் இதற்கான ஆய்வுக்கூடம் அமைக்கப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயற்கையாக, பருவ நிலை மாற்றத்தை நம்மால் ஏற்படுத்திவிட முடியும்,” என்றார் திரு.ரவிச்சந்திரன்.

இது சவாலான திட்டம்தான் என்றும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் செயற்கை மழைத்திட்டம் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

“மழையின் அளவைக் குறைத்து விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க, செயற்கை மழைத் திட்டத்தை உருவாக்குகின்றனர்.

“மேலும், மழை, வெயில் உள்ளிட்ட கால நிலை தொடர்பான விவரங்கள் உடனுக்குடன் அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக கிடைக்க வழிவகை செய்யப்படும்,” என்றும் திரு.ரவிச்சந்திரன் மேலும் கூறினார்.

பருவ நிலை மாற்றம் காரணமாக மழைப்பொழிவில் ஏற்படும் மாற்றங்களால் இந்தியாவின் பல்வேறு பகுதிகள் வெள்ளப்பெருக்கால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.

அண்மையில் தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டன.

தற்போது அண்டை மாநிலமான ஆந்திராவும் பலத்த மழையால் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கு பிரச்சினைக்கு மத்திய அரசின் செயற்கை மழைத் திட்டம் நல்ல தீர்வாக அமையும் என்கிறார்கள் நிபுணர்கள்.

குறிப்புச் சொற்கள்