புதுடெல்லி: பாகிஸ்தானிலிருந்து இறக்குமதியாகும் எல்லா பொருள்களுக்கும் இந்தியா தடை விதித்துள்ளது.
இத்தடை, உடனடியாக நடப்புக்கு வந்ததாக இந்திய வர்த்தக அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
தடையை நடைமுறைப்படுத்த வகைசெய்யும் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை (எஃப்டிபி) 2023ல் ஓர் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. தேசியப் பாதுகாப்பு போன்ற அம்சங்களைக் கருத்தில்கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிநாட்டு வர்த்தகத் தலைமை இயக்ககம் (டிஜிஎஃப்டி) தெரிவித்தது.
தடையைத் தாண்டி பொருள்களை ஏற்றுமதி செய்ய விரும்பினால் சம்பந்தப்பட்டவர்கள் இந்திய அரசாங்கத்திடம் அனுமதி பெறவேண்டும்.
“நேரடியாகவோ மாற்று முறைகள் வாயிலாகவோ பாகிஸ்தானில் உற்பத்தியான பொருள்களுக்கும் அங்கிருந்து ஏற்றுமதியாகும் பொருள்களுக்கும் மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தடையின்றி இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள், ஏற்றுமதிக்கான அனுமதி பெற்ற பொருள்கள் ஆகியவற்றுக்குத் தடை பொருந்தும்,” என்று இந்திய வர்த்தக அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதியன்று பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. அதில் 26 சுற்றுப்பயணிகள் கொல்லப்பட்டனர்.
அதனையடுத்து இந்தியா, பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்துவருவதற்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்று இந்துஸ்தான் டைம்சில் குறிப்பிடப்பட்டுள்ளது. இண்டஸ் நீர் ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக ரத்து செய்தது, அட்டாரி எல்லைப் பகுதியை மூடியது உள்ளிட்டவை இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளில் அடங்கும்.
இதற்கிடையே, இந்திய துறைமுகங்கள், கப்பல் துறை, நீர்வழிகள் அமைச்சு இந்திய துறைமுகங்களுக்குள் பாகிஸ்தானிய கப்பல்கள் நுழைவதைத் தடை செய்துள்ளது. அதோடு, இந்தியக் கப்பல்கள் பாகிஸ்தானிய துறைமுகங்களுக்குச் செல்வதையும் அமைச்சு தடை செய்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இத்தடைகள் உடனடியாக நடப்புக்கு வந்துள்ளன. இந்தியச் சொத்துகள், சரக்குகள், துறைமுகக் கட்டமைப்பு ஆகியவற்றைப் பாதுகாக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.