புதுடெல்லி: கொத்தடிமை முறையில் தயாரிக்கப்படும் பொருள்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை அந்நாட்டின் வர்த்தக அமைச்சு செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிகளிலிருந்து தப்பிப்பதற்கு இந்த நடவடிக்கை உதவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொத்தடிமை முறையால் தயாரிக்கப்படும் பொருள்களின் இறக்குமதியைத் தடுக்கத் தவறியதாகக் கூறி, அமெரிக்கா விதித்துள்ள புதிய 12.5 விழுக்காடு வர்த்தக வரி அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பல நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
“முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ கொத்தடிமை முறையைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்குத் தடை விதிப்பதாக ஜூலை 13ஆம் தேதி இந்தியா வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவித்தது.
இந்தப் புதிய விதிமுறையின்படி, இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் கொத்தடிமைகள் மூலம் தயாரிக்கப்பட்டவையா என்பதை இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு விரிவாக விசாரிக்க வேண்டும்.
அதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டால், உரிய கலந்தாலோசனைகளுக்குப் பிறகு அந்தப் பொருள்களின் இறக்குமதிக்குத் தடை விதிக்குமாறு அரசாங்கத்திற்கு அது பரிந்துரைக்கும்.
இந்தப் புதிய உத்தரவு இன்னும் 30 நாள்களில் நடைமுறைக்கு வரும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலான நாடுகளைப் போலவே, இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பெரும்பாலான பொருள்களுக்குத் தற்போது 10 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.
எனினும், கொத்தடிமை முறை, தொழில்துறைத் தயாரிப்புத் திறன் மிகுதி ஆகியவை குறித்து அமெரிக்கா மேற்கொண்டுவரும் இரு வேறு விசாரணைகளின் அடிப்படையில், இந்தியாமீது மேலும் கடுமையான வரிகளை விதிக்க அந்நாடு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

