எண்ணெய் சுத்திகரிப்பு வல்லரசாகும் இந்தியா

எண்ணெய் சுத்திகரிப்பு வல்லரசாகும் இந்தியா

குஜராத்தின் சிறு நகரத்துக்குச் சென்ற மார்க்கோ ரூபியோ புகழாரம்
படம்: ராய்ட்டர்ஸ்

24 Oct 2026 - 8:31 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியாவுக்கு அண்மையில் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, தலைநகர் டெல்லியைத் தவிர்த்து குஜராத் மாநிலத்தின் ஜாம்நகருக்கு நேரடியாகச் சென்றது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான உலகின் ஆகப் பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஜாம்நகரில் அமைந்துள்ளது. அனைத்துலக அளவில் எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்தவும், இந்தியாவுடனான எரிசக்தி வணிகத்தை விரிவுபடுத்தவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளதால், இப்பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

உலகளாவிய மோதல்களால் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிலவும் வேளையில், இந்தியாவை “எண்ணெய் சுத்திகரிப்பின் வல்லரசு” என ரூபியோ குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு நாடுகளிலிருந்து எண்ணெய் வாங்கும் நடவடிக்கைகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. எண்ணெய் கொள்முதலைப் பல்வகைப்படுத்துவது புத்திசாலித்தனமானது என்று அவர் கூறினார்.

வெனிசுவேலாவில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் அமெரிக்கா பேச்சு நடத்தவுள்ளதைச் சுட்டிய திரு ரூபியோ வெனிசுலாவில் இந்தியாவுக்கு ஏற்கெனவே எண்ணெய் உற்பத்தி தொடர்பான உரிமங்கள் இருப்பதால், அங்கு உற்பத்தியை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார்.

உலகளவில் நான்காவது பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நாடாக விளங்கும் இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, வெனிசுவேலா போன்ற பல்வேறு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யைப் பெற்று சுத்திகரிக்கிறது.

இதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதி பெருமளவில் அதிகரித்துள்ளது.

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் சிங்கப்பூருக்கான இந்தியாவின் பெட்ரோலிய ஏற்றுமதி மட்டும் 4.51 பில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் விநியோகத் தட்டுப்பாடு, சிங்கப்பூரின் முக்கிய விநியோக மையக் கட்டமைப்பு காரணமாக இந்தியாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி கணிசமாக உயர்ந்துள்ளது.

மேலும், டெக்சாசில் ரிலையன்ஸ் நிறுவனம் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான சுத்திகரிப்பு ஆலையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதும் அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்தியுள்ளது.

எண்ணெய் சுத்திகரிப்புத் திறனை 2030க்குள் ஆண்டுக்கு 309.5 மில்லியன் டன்னாக உயர்த்த இந்தியா இலக்கு வைத்துள்ள நிலையில், உலகளாவிய எரிசக்திச் சந்தையில் இந்தியாவின் ஆதிக்கம் மேன்மேலும் உயர்ந்து வருகிறது.

இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்