புதுடெல்லி: உலகின் நான்காவது ஆகப்பெரிய பொருளியல் நாடாக உயர்ந்துள்ளது இந்தியா.
இதுதொடர்பாக, ‘இந்தியாவின் வளர்ச்சியை வரவேற்கும் ஆண்டு’ என்ற தலைப்பில் இந்திய செய்தி தகவல் அலுவலகம் (பிஐபி) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.18 டிரில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் இதன்மூலம் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி உலகின் நான்காவது ஆகப்பெரிய பொருளியல் நாடாக இந்தியா உயர்ந்துள்ளது என்றும் பிஐபி அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவின் பொருளியல் வேகமாக வளர்ந்து வருகிறது. பல்வேறு உலக நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து வளர்ச்சிக்கான ஒப்பந்தங்களில் உடன்பாடு கண்டுள்ளது. இதனால் பல்வேறு துறைகளில் இந்தியா ஒருசேர வளர்ச்சி கண்டு வருவதாக பொருளியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதே வேகத்தில் இந்தியா சீரான வளர்ச்சி காணும் பட்சத்தில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அடுத்தக்கட்ட வளர்ச்சியை எட்டிப்பிடிக்கும் என்றும் பொருளியல் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அநேகமாக, அச்சமயம் ஜெர்மனியை இந்தியா முந்திவிடும் என்றும் நிபுணர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. 2030ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பானது, 7.3 டிரில்லியன் டாலராக இருக்கும் எனக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆறு காலாண்டுகளை ஒப்பிடும்போது கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் 8.2% ஆக அதிகரித்தது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வளர்ச்சி விகிதம் 7.8 விழுக்காடாக இருந்ததை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
அனைத்துலக அளவில் நிலவும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், இந்தியாவின் மீள்தன்மையை இந்த புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துவதாக இந்திய செய்தி தகவல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உலகின் ஆகப்பெரிய பொருளியலைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தையும் அதற்கு அடுத்து சீனாவும் உள்ளன. ஒரு காலத்தில் கடும் பொருளியல் சரிவைக் கண்ட நாடுகளின் பட்டியலில் இருந்த இந்தியா, தற்போது அனைத்துலக அளவில் முதல் மூன்று இடங்களுக்குள் இடம்பெறுவதற்கு முயன்று வருகிறது.
இந்தியாவின் இந்த வேகமான, சீரான வளர்ச்சியானது துறைசார்ந்த நிபுணர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

