தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவின் சர்க்கரை, பெட்ரோலியம், ரத்தினக் கல் ஏற்றுமதி பன்மடங்கு அதிகரிப்பு

2 mins read
892699ee-2db3-46b9-8e8a-f337489dc7f5
இந்தியாவின் ஏற்றுமதி துறைகளில் குறிப்பாக பெட்ரோலியம், ரத்தினக் கற்கள், வேளாண் ரசாயனங்கள், சர்க்கரை போன்றவற்றில் ஆரோக்கியமான லாபத்தைக் கண்டுள்ளது. - கோப்புப் படம்: இணையம்

புதுடெல்லி: கடந்த ஐந்தாண்டுகளில் பெட்ரோலியம், ரத்தின கற்கள், சா்க்கரை ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு உலக அளவில் அதிகரித்துள்ளதாக இந்திய வா்த்தக அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு உலகச் சந்தையில் இந்திய பெட்ரோலியம் ஏற்றுமதியின் பங்கு 6.45 விழுக்காடாக இருந்தது. இது 2023ஆம் ஆண்டு 12.59 விழுக்காடாக உயா்ந்து 84.96 பில்லியன் டாலருக்கு (கிட்டத்தட்ட ரூ.7.14 லட்சம் கோடி) பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யைச் சுத்திகரித்து உற்பத்தி செய்யப்படும் பெட்ரோலியப் பொருள்களை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது.

2018ல் 16.27% ஆக இருந்த இந்திய ரத்தினக் கற்கள் ஏற்றுமதியின் பங்கு, 2023ஆம் ஆண்டில் 36.53% ஆக உயா்ந்து 1.52 பில்லியன் டாலருக்கு (ஏறக்குறைய ரூ.12,788 கோடி) ரத்தினக் கற்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

கரும்பு அல்லது பீட் சர்க்கரை ஏற்றுமதியில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது, அதன் உலகளாவிய சந்தை பங்கு 2018ன் 4.17 விழுக்காட்டிலிருந்து 2023ல் 12.21 விழுக்காடாக நான்கு மடங்கு உயா்ந்து 3.72 பில்லியன் டாலருக்கு (ரூ.31,297 கோடி) ஏற்றுமதி செய்யப்பட்டது.

உலகின் இரண்டாவது பெரிய சர்க்கரை ஏற்றுமதியாளராக, இந்தியாவின் வெற்றிக்கு சாதகமான விவசாயக் கொள்கைகள், அதன் வலுவான உற்பத்தித் தளம் ஆகிய இரண்டும் காரணமாக இருக்கலாம். சர்க்கரைக்கான உலகளாவிய தேவையை, குறிப்பாக தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் இந்தியா சாதகமாக்கிக் கொண்டுள்ளதாக அமைச்சின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி பிஸினஸ் ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், பூச்சிகொல்லிகள், குறைகடத்தி (semiconductors) உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்