சீனாவிடம் பல்லாயிரம் டன் சோயா எண்ணெய்யை வாங்கியது இந்தியா

சீனாவிடம் பல்லாயிரம் டன் சோயா எண்ணெய்யை வாங்கியது இந்தியா

2 mins read
ef7ef297-78b7-4fc3-827e-067cb5c55344
தென் அமெரிக்காவைக் காட்டிலும் குறைவான விலைக்கு சீனா விற்றதால் அதிக அளவில் சோயா எண்ணெய்யை இந்திய இறக்குமதியாளர்கள் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. - படம்: ஊடகம்

மும்பை: இந்திய இறக்குமதியாளர்கள் சீனாவிடம் இருந்து சாதனை அளவாக 150,000 மெட்ரிக் டன் அளவுக்கு சோயா எண்ணெய்யை வாங்கி இருப்பதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இது ஓர் அரிதான சம்பவமாகப் பார்க்கப்படுகிறது.

சீனா கடந்த மே மாதம் தனது தேவைக்கு மிஞ்சிய அளவுக்கு சோயா எண்ணெய்யை இறக்குமதி செய்துவிட்டது. அதேநேரம், சோயா எண்ணெய்க்கான தேவை குறைந்துவிட்டது. அதனால், அதனைச் சேமித்து வைப்பதற்கான செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தள்ளுபடி விலையில் அதனை விற்க முன்வந்துள்ளது.

உலகின் ஆகப்பெரிய சோயா எண்ணெய் இறக்குமதியாளராக சீனா உள்ளது. 

தென் அமெரிக்காதான் சோயா எண்ணெய்யை ஏற்றுமதி செய்கிறது.

அளவுக்கு அதிகமாக சோயா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டதால் டன்னுக்கு 15 முதல் 20 அமெரிக்க டாலர் வரை குறைந்த விலையில் விற்க சீனா முன் வந்தது.

அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கடந்த ஆண்டு செப்டம்பருக்கும் டிசம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் சோயா எண்ணெய்யை இந்திய இறக்குமதியாளர்கள் வாங்கிவிட்டனர்.

தென் அமெரிக்காவைக் காட்டிலும் குறைவான விலை என்பதால் அதிக அளவில் சோயா எண்ணெய்யை வாங்கியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய வர்த்தகர்கள் சிலர் ஊடகங்களிடம் இத்தகவலைத் தெரிவித்தனர்.

அவர்களில் ஒருவர் டெல்லியைச் சேர்ந்த விநியோகிப்பாளர். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், “சீனாவில் சோயா பயறும்  சோயா எண்ணெய்யும் மலைபோல் குவிந்துவிட்டதால் அதனைச் சேமித்து வைப்பது மற்றும் அதுதொடர்பான செலவுகளைச் சமாளிக்க சீன சோயா வணிகர் சிரமப்படுகின்றனர்.

“செலவுகளைக் கட்டுப்படுத்த அவர்கள் இந்தியாவுக்கு சோயா எண்ணெய்யை குறைந்த விலையில் விற்க முன்வந்துள்ளனர்,” என்றார்.

“வழக்கமாக, அர்ஜெண்டினாவிலிருந்தும் பிரேசிலில் இருந்தும் சோயா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யும். இருப்பினும், விலை குறைவு காரணமாக முதல்முறை அளவுக்கு அதிகமான சோயா எண்ணெய்யை இந்திய வர்த்தகர்கள் இறக்குமதி செய்துள்ளனர்,” என்றும் அவர் தெரிவித்தார். 

மற்றொரு விநியோகிப்பாளர் கூறுகையில், “கடந்த ஆண்டு டிசம்பர் வரையிலான காலாண்டில் ஒரு டன் சோயா எண்ணெய்யை 1,140 அமெரிக்க டாலருக்கு இந்தியாவிடம் சீனா விற்பனை செய்தது.

அப்போது தென் அமெரிக்காவில் அதன் விலை 1,160 அமெரிக்க டாலராக இருந்தது,” என்றார்.

சரக்கு வந்து சேரும் காலமும் குறைவு என்பதால் சீனாவுக்கு முன்னுரிமை தரப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தென் அமெரிக்காவில் இருந்து சோயா எண்ணெய் இந்தியா வந்து சேர ஆறு வாரங்களுக்கு மேல் ஆகும். அதேநேரம் சீனாவில் இருந்து இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் வந்து சேர்ந்துவிடும் என்றார் மும்பையைச் சேர்ந்த அவர்.

இந்தியா தனது தாவர எண்ணெய்க்கான தேவையில் மூன்றில் இரண்டு பங்கை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்கிறது. தனியார் நிறுவனங்கள் அதில் ஈடுபடுகின்றன.

பெரும்பாலும் இந்தோனீசியாவில் இருந்தும் மலேசியாவில் இருந்தும் செம்பனை எண்ணெய் எனப்படும் பாமாயிலை இந்தியா தருவிக்கிறது.

அதேநேரம் சூரிய காந்தி எண்ணெய்யையும் சோயா எண்ணெய்யையும் ரஷ்யா, உக்ரேன், அர்ஜெண்டினா மற்றும் பிரேசிலில் இருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது.

குறிப்புச் சொற்கள்