114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா

114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா

2 mins read
4bcc6833-6b7e-4f5e-941a-c9f467acea23
போர்த்திறன் மிக்க ரஃபேல் விமானம். - படம்: இந்திய டுடே

புதுடெல்லி: இந்தியா தனது வான்வழி போர்த்திறன்களை வலுப்படுத்தும் நடவடிக்கையாக 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குகிறது.

பிரான்சிடமிருந்த அந்த விமானங்களை வாங்க ஏறத்தாழ 3.25 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கங்களுக்கு இடையிலான உடன்பாடு என்னும் கட்டமைப்பின்கீழ் தயாரிக்கப்பட்டுள்ள விமானக் கொள்முதலுக்கான கடிதம் வரும் வாரங்களில் பிரான்சிடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவே, இந்தியாவின் ஆகப் பெரிய போர் விமானக் கொள்முதல் திட்டமாகக் கருதப்படுகிறது.

இந்திய விமானப் படைத் தளபதி அமர் பிரீத் சிங் மூன்று நாள் பயணமாக திங்கட்கிழமை (ஜூன் 1) பிரான்ஸ் சென்றிருக்கும் நிலையில் ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கூடுதல் ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா முயன்றுவரும் வேளையில் அமைந்துள்ள அவரது பயணம் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.

இந்தியக் கடற்படையும் விமானப்படையும் ஏற்கெனவே 62 ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்நிலையில், மேலும் 114 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இதன்மூலம் 200க்கும் மேற்பட்ட ரஃபேல் விமானங்களை இந்தியா பெறக்கூடும்.

உத்தேசக் கொள்முதல் உடன்பாட்டின்படி, 114 ரஃபேல் போர் விமானங்களில் கிட்டத்தட்ட 90 விமானங்களை இந்தியாவிலேயே தயாரிக்க இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.

அதற்காக பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துக்கும் இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் இடம்பெறும் இந்திய நிறுவனத்துக்கும் இடையில் பங்காளித்துவம் ஏற்படுத்தப்படும்.

இந்தியாவில் 92 விமானங்கள் தயாரிக்கப்படலாம் என்றும் 22 விமானங்கள் மட்டும் பிரான்சில் தயாராகி இந்தியாவுக்கு அனுப்பப்படும் என்றும் அதிகாரிகள் சிலர் ஊடகங்களிடம் கூறியுள்ளனர்.

இந்தப் போர் விமானக் கொள்முதல் திட்டம் இந்தியாவின் விண்வெளி உற்பத்திச் சூழலமைப்புக்கு ஊக்கம் அளிப்பதோடு, தற்காப்புத் தயாரிப்புகளில் தற்சார்பை அடைவதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கும் துணைபுரியும்.

மேலும், மாறிவரும் வட்டாரப் பாதுகாப்புச் சவால்களுக்கு இடையில், இந்திய விமானப்படையின் செயல்பாட்டுத் தயார்நிலையை உறுதிசெய்வதையே இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

வான்வழி ஆதிக்கம், தரைவழித் தாக்குதல், உளவு, உத்திசார் தடுப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்ட ‘ரஃபேல்’ விமானம், உலகின் மிகவும் மேம்பட்ட பல்நோக்குப் போர் விமானங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்