புதுடெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நேரடி விமானச் சேவை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) மீண்டும் தொடங்கியது.
இண்டிகோ நிறுவனத்தின் 6E1703 விமானம் ஞாயிறு இரவு 10 மணிக்கு கோல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சீனாவின் குவாங்சோ நோக்கி புறப்பட்டது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான விமான இணைப்புகள் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பின.
டெல்லி–குவாங்சோ விமானச் சேவை நவம்பர் 9 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு கசப்படைந்த இந்தியா-சீனா உறவு மீண்டும் புதிய பாதையில் முன்னேறுகிறது என்பதற்கான அறிகுறியாக இது கருதப்படுகிறது.
நேரடி விமானச் சேவை பயணிகள், தொழிலதிபர்கள், மாணவர்களுக்குப் பெரும் வசதியாக இருக்கும். சீனாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் இனி நேரடியாகப் பயணம் செய்ய முடியும்; இதனால் நேரமும் பணமும் மிச்சப்படும். வணிக நிறுவனங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போக்குவரத்தை எளிதாகச் செய்ய முடியும். கைலாஷ் மானசரோவர் யாத்திரை போன்ற மத, மருத்துவ பயணங்களும் இலகுவாகும்.
மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களிலிருந்தும் சீனாவின் பிற நகரங்களுக்கு விமானச் சேவைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கிறது.

