புதுடெல்லி: இந்தியாவும் சீனாவும் ஒன்றையொன்று போட்டியாளராகவோ அல்லது அச்சுறுத்தலாகவோ பார்க்கக் கூடாது. பங்காளிகளாகக் கருத வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு இருநாள் பயணம் மேற்கொண்டு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) புதுடெல்லி சென்றிருக்கும் வாங் யி, இன்று (ஆகஸ்ட் 19) இந்தியப் பிரதமர் மோடியுடன் பேச்சு நடத்துகிறார்.
இருநாட்டு உறவு தற்போது நேர்மறையாக உள்ளது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்புக்கு முன்னதாக வாங் யி கூறினார். இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் இன்று 24வது சுற்று எல்லைப் பேச்சு நடத்துவார்.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியின் இந்தியப் பயணம் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு நாடுகளுக்கு இடையே பதற்றத்தைத் தணித்துள்ளது.
முன்னதாக, நேற்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கருடன் சந்திப்பு நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் எல்லையில் அமைதி, வர்த்தகப் பிரச்சினைகள், இருதரப்பு பரிமாற்றங்கள் ஆகியவை குறித்து இருவரும் விவாதித்தனர்.
“பொருளியல், வணிகப் பிரச்சினைகள், மக்களுக்கு இடையிலான தொடர்பு, நதி நீர்ப் பகிர்வு, எல்லை வணிகம், இருநாட்டுக்கிடையிலான இணைப்பு, இருதரப்பு பரிமாற்றம் குறித்து பயனுள்ள உரையாடல் மேற்கொண்டோம்,” என்று திரு ஜெய்சங்கர் கூறினார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலையான பங்காளித்துவத்தையும் எதிர்கால நோக்கிலான உறவை உருவாக்க இந்த உரையாடல்கள் பங்களிக்கும் என்றும் அவர் கூறினார்.
அனைத்து நிலைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான பரிமாற்றங்களும் பேச்சுவார்த்தைகளும் படிப்படியாக மீண்டும் இடம்பெறுவதாகவும் இருதரப்பு உறவு ஒத்துழைப்புக்கு திரும்புவதாகவும் வாங் யி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2020ஆம் ஆண்டு, கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலுக்குப் பிறகு, இந்தியா – சீனா உறவு கடும் பின்னடைவைச் சந்தித்தது. எல்லையில் ஆயிரக்கணக்கான வீரர்கள் குவிக்கப்பட்டு, பதற்றம் உச்சத்தில் இருந்தது. இந்த நிலையில், இந்தச் சந்திப்பு எல்லையில் நிலவும் அமைதியின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வர்த்தகப் போர் கொண்டுவந்த இடையூறு, போட்டி ஆசிய சக்திகள் உறவுகளைச் சரிசெய்ய முற்படுவதற்கான கதவைத் திறந்துள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
2020 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நேரடி விமானச் சேவையை அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் தொடங்குவது குறித்தும், வணிகத் தடைகளை தளர்த்துவது, சீனாவும் இந்தியாவும் விவாதித்துள்ளன.
பொருள்களைப் பொறுத்தவரை இந்தியாவின் மிகப்பெரிய வணிகப் பங்காளியாக சீனா உள்ளது இங்கு நினைவுகூரத்தக்கது.

