பெய்ஜிங்: இந்தியாவும் சீனாவும் இருதரப்பு உறவின் வளர்ச்சிக்கும் ஒத்துழைப்புக்கும் அழைப்பு விடுத்துள்ளன.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க சீனாவுக்குச் சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சீனத் துணை அதிபர் ஹான் ஸெங்குடன் பெய்ஜிங்கில் திங்கட்கிழமை (ஜூலை 14) சந்திப்பு நடத்தினார். அதைத் தொடர்ந்து, இருதரப்பு உறவை மேம்படுத்த இரு நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.
இந்தியாவும் சீனாவும் இருதரப்புக்கும் பயன் அளிக்கும் வகையில் இருதரப்பு உறவை வழக்கநிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான கருத்துப் பரிமாற்றம் மிகவும் முக்கியம் என்றும் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இருநாட்டு ஒத்துழைப்பை சீராக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று சீனத் துணை அதிபர் ஹான் ஸெங், எஸ். ஜெய்சங்கரிடம் கூறியதாக சின்ஹுவா செய்தி தெரிவித்தது.
இரு நாடுகளும் ஒன்றொக்கொன்று மதிப்பளிக்க வேண்டும் என்றும், இருதரப்பு உறவின் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்றும் திரு ஹான் ஸெங் கூறினார்.
2020ஆம் ஆண்டு லடாக் எல்லையில் ஏற்பட்ட ராணுவ மோதலுக்குப் பிறகு முதல் முறையாக சீனா சென்றுள்ள திரு எஸ்.ஜெய்சங்கர், இந்தியா - சீனா இடையேயான உறவு வழக்கநிலையில் இருக்க அழைப்பு விடுத்தார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடங்கி இருப்பதை அவர் பாராட்டினார்.
அனைத்துலக நிலைமை மிகவும் சிக்கலானதாக உள்ள நிலையில், அண்டை நாடுகளாகவும் பெரிய பொருளியல்களாகவும் உள்ள இந்தியாவும் சீனாவும் வெளிப்படைத் தன்மையுடன் கருத்துகளைப் பரிமாறிக்கொள்வது மிகவும் முக்கியம் என்றார் அவர்.
இந்தப் பயணத்தின்போது இதுபோன்ற பரிமாற்றங்களைத் தாம் எதிர்நோக்குவதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
ரஷ்யாவில் பிரதமர் மோடியும் அதிபர் ஜி ஜின்பிங்கும் கடந்த ஆண்டு அக்டோபரில் மேற்கொண்ட சந்திப்பைத் தொடர்ந்து இருதரப்பு உறவு சீராக மேம்பட்டு வருவதாகக் கூறிய ஜெய்சங்கர், தனது பயணம் அதை மேலும் வலுப்படுத்தும் என நம்புவதாகக் கூறினார்.
சீனாவின் தியான்ஜின் நகரில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) நடைபெற உள்ள எஸ்சிஓ வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில், அமைப்பின் உறுப்பு நாடுகளான சீனா, ரஷ்யா, இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய 10 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

