புதுடெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் பிரச்சினைகள் இருப்பினும் பூசலின்றி, மோதலின்றி அவற்றைத் தீர்ப்பதற்கான வழிகள் உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஆசிய அமைப்பு நடத்திய கலந்துரையாடலில் பங்கேற்றுப் பேசிய அவர், “நமது அண்டை நாடான சீனாவுடன் 1962ஆம் ஆண்டு போர் நடந்தது. அது முடிவடைந்து, 14 ஆண்டுகளுக்குப் பின்னர் சீனா தனது தூதரை இந்தியாவுக்கு அனுப்பியது.
“நமது நாட்டின் பிரதமர், சீனாவுக்குச் செல்ல கூடுதலாக 12 ஆண்டுகள் தேவைப்பட்டன. 1988ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை இருநாட்டு எல்லைகளில் இடையே மோதல் நீடித்தது. ஆனால், ரத்தக்கறை படியவில்லை.
“எனினும், 2020ஆம் ஆண்டு நடந்த மோதல் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் சிக்கலை ஏற்படுத்தியது.
“அந்த மோதல் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்களை மீறியதாக அமைந்தது.
“ஆனால், 2024 அக்டோபர் முதல் இந்தியா - சீனா இடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகீறது. இருதரப்பும் அதனதன் விருப்பத்தின்படி உறவை மீண்டும் கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
“சீனாவுடன், நாம் பல்வேறு அம்சங்களில் வேறுபட்டு இருக்கலாம். இது, இரு நாடுகளுக்கும் இடையே போட்டி மனப்பான்மையாக இருக்கலாமே தவிர, அது மோதல் போக்காக மாற வேண்டிய அவசியமில்லை.
“2020ஆம் ஆண்டு நிகழ்ந்ததைப் போல எதிர்காலத்தில் நிகழக்கூடாது,” என்றார் ஜெய்சங்கர்.
தொடர்புடைய செய்திகள்
2020ஆம் ஆண்டு இந்திய, சீன வீரர்கள் மோதிக்கொண்டதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். சீனத் தரப்பில் நால்வர் உயிரிழந்தனர்.
அதன் பிறகு நீடித்த மோதல் போக்கால் இருதரப்பு உறவுகள் பாதிக்கப்பட்டன. வியாபாரம் தொடங்கி தொழில்நுட்பம், விமானப் பயணம் வரையில் அது பாதிப்பை ஏற்படுத்தியது.