தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவின் காபி ஏற்றுமதி 55 விழுக்காடு அதிகரிப்பு

2 mins read
3e8eeabc-9f09-46ed-839f-b8e50f87b3b8
2023 - 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் 3.6 லட்சம் மெட்ரிக் டன் காபி உற்பத்தி செய்யப்பட்டது. - கோப்புப் படம்: இணையம்

புதுடெல்லி: இந்தியாவின் காபி ஏற்றுமதி அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் மட்டும் ரூ.7,771.88 கோடி மதிப்புடைய காபி, ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் காபி ஏற்றுமதி ரூ.4,956 ஆக மட்டுமே இருந்தது. இந்த நிதியாண்டில் இது 55 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் உற்பத்தியாகும் காபிக்கு அனைத்துலக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளதும், அதன் விளைவாக ஏற்றுமதி அதிகரித்துள்ளதும் விவசாயத் துறையில் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 2.2 லட்சம் டன் மதிப்புடைய காபி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 15 விழுக்காடு அதிகமாகும். கடந்த ஆண்டு 1.91 லட்சம் டன் காபி மட்டுமே ஏற்றுமதியானது.

ஐரோப்பிய ஏற்றுமதி விதிமுறைகளுக்கு மத்தியில், அனைத்துலகச் சந்தையில் காபி விலையும் அதிகரித்துள்ளது. இந்தியக் காபித் தூள் விலை கிலோவுக்கு ரூ.352 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.259 ஆக இருந்தது.

இந்தியக் காபி ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளில் அதிகபட்சமாக 20% இத்தாலி பயன்படுத்துகிறது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனி, ரஷ்யா, ஐக்கிய அரபுச் சிற்றரசு, பெல்ஜியம் ஆகிய நாடுகள் ஒட்டுமொத்தமாக, இந்திய ஏற்றுமதியில் 45% காபியை பயன்படுத்துகிறது.

2023 - 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் 3.6 லட்சம் மெட்ரிக் டன் காபி உற்பத்தி செய்யப்பட்டது.

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் காபியில் 70% கர்நாடகத்திலிருந்து கிடைக்கிறது. நாட்டின் காபி உற்பத்தியில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக கேரளத்தில் 20% கிடைக்கிறது.தமிழ்நாடு 5.7% உற்பத்தியுடன் 3வது இடத்தில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்