நல்லுறவைத் தொடர்ந்து மேம்படுத்த இந்தியாவும் சீனாவும் உறுதிபூண்டுள்ளன.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் இன்று (ஆகஸ்ட் 31) பேச்சு நடத்தினர்.
சீனாவும் இந்தியாவும் போட்டியாளர்களாக அல்ல, பங்காளிகளாக இருக்க வேண்டும் என்று மோடியிடம் ஸி ஜின்பிங் கூறினார். இருநாடுகளுக்கும் இடையே இப்போது “அமைதியும் நிலைத்தன்மை நிறைந்த சூழலும்” நிலவுவதாக மோடி கூறினார்.
இந்தக் கலந்துரையாடலின்போது “பரஸ்பர மரியாதை, நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் சீனாவுடனான உறவுகளை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளோம்” என்று சீன அதிபரிடம் மோடி கூறினார்.
இருபதுக்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் கலந்துகொள்ளும் இந்த உச்சநிலை மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் பங்கேற்கிறார். சீனா சென்றிருக்கும் திரு மோடி, புட்டின் உள்ளிட்ட தலைவர்களுடனும் பேச்சு நடத்துகிறார்.
இந்தியா உள்பட உலக நாடுகள் பலவற்றின்மீது அமெரிக்கா விதித்திருக்கும் கடுமையான பொருளியல் வரிவிதிப்புகள், இந்தியா அமெரிக்கா இடையிலான வணிக உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கும் சூழலில் திரு மோடி சீன அதிபர், ரஷ்ய அதிபர்களுடன் பேச்சு நடத்துவது அனைத்துலக அரசியல் களத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கவனிக்கப்படுகிறது.
சீனாவின் டியன்ஜின் துறைமுக நகரில் நடைபெறும் இந்த மாநாட்டில், மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப், துருக்கி உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களும் அணிதிரண்டுள்ளனர்.
எனினும், அனைத்துலக ஊடகங்களும், ஐரோப்பிய நாடுகள் பலவும், தங்களின் கவனத்தை சீன அதிபர் ஸி, இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புட்டின் ஆகியோர் மீதே பதித்துள்ளன. ஆசிய நாடுகளுக்குச் சாதகமாகப் பொருளியல், வணிகம் சார்ந்த முடிவுகளை இத்தலைவர்கள் எடுப்பார்கள்; மேலும், இதனால் அமெரிக்காவின் ஆதிக்கம் குறைந்து ஏற்றுமதி சார்ந்த பொருளியல் உறவில் புதிய அத்தியாயம் எழுதப்படும் என்ற நம்பிக்கையும் நாடுகள் மத்தியில் பரவலாக நிலவுகிறது.