சிங்கப்பூர்: பாகிஸ்தானோடு ஏற்பட்ட மோதலின்போது தனது போர் விமானங்களை இழந்ததை இந்திய ராணுவம் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.
மே 7ஆம் தேதி தொடங்கி நான்கு நாள்கள் நீடித்த ராணுவ மோதலின்போது இந்தியப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறி இருந்தது.
ஆறு இந்திய போர் விமானங்களை தமது படையினர் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரிஃப் கூறியிருந்தார். ஆயினும், அந்த எண்ணிக்கை உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில், சிங்கப்பூரில் நடைபெறும் ஷங்ரிலா கலந்துரையாடலில் பங்கேற்க வந்த இந்திய ஆயுதப் படையின் தலைமைத் தற்காப்பு அதிகாரி அனில் சவுகான், புளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.
“விமானங்கள் வீழ்த்தப்பட்டதைக் காட்டிலும் ஏன் வீழ்த்தப்பட்டன என்பதே முக்கியம்,” என்றார் அவர்.
இந்தியாவுக்குச் சொந்தமான ஆறு போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுவது ‘அப்பட்டமான பொய்’ என்று கூறிய ஜெனரல் சவுகான், போரில் இந்தியா இழந்த விமானங்களின் எண்ணிக்கையைத் தெரிவிக்க மறுத்தார்.
அது பற்றி தொலைக்காட்சி செய்தியாளர் கேட்டபோது, “எண்ணிக்கை முக்கியமல்ல; விமானங்கள் ஏன் வீழ்த்தப்பட்டன, என்ன தவறு நடந்தது என்பனதான் முக்கியம்,” என்றார்.
மேலும், “எங்களது போர்த் தந்திரமுறையில் தவறு ஏற்பட்டதை உணர்ந்து அவற்றைத் திருத்தி, இரு நாள்கள் கழித்து, திருத்தப்பட்ட தந்திரமுறையோடு எங்களது போர் விமானங்கள் நீண்டதூர தாக்குதல் இலக்கை நோக்கிப் பறந்தன. அதுவே நாங்கள் செய்த சரியான செயல்,” என்று அவர் விளக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
பாகிஸ்தானுடன் நடைபெற்ற மோதலின்போது இந்தியாவின் போர் விமானங்களுக்கு என்ன நேர்ந்தது, பாகிஸ்தான் படையினரால் எத்தனை விமானங்கள் சுடப்பட்டன என்பன போன்றவை இதுவரை கேள்விகளாகவே இருந்தன.
இந்நிலையில், தற்போது முதல்முறை இந்திய அரசாங்கம் அல்லது ராணுவ அதிகாரி தரப்பில் இருந்து நேரடியாக அதற்குப் பதில் கூறப்பட்டுள்ளது.