சீனாவுக்கு சந்தையைத் திறக்க இந்தியா கவனமாகப் பரிசீலனை

2 mins read
ecc5ed49-6b87-4a45-a531-fc0ba97d1d54
ரஷ்யாவில் 2024 அக்டோபர் 23ஆம் தேதி நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டையொட்டி இந்தியப் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் சந்தித்தனர். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

இந்தியச் சந்தையை சீனாவுக்குப் படிப்படியாகத் திறப்பது குறித்து இந்திய அரசாங்கம் கவனமாகப் பரிசீலிப்பதாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தகவல் மூலம் அறியப்படுகிறது.

அரசாங்கத்தின் உயர்மட்ட அளவில் சீனாவுக்குக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும் ஆலோசிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் அதிகப்படியான வரி விதிப்பாலும் உலகளாவிய வர்த்தக முறை மாற்றத்தாலும் இத்தகைய ஆலோசனையில் இந்தியா ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தையில் உள்ள அணுகுமுறை விரிவானதாக இல்லாமல் படிப்படியாக இருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தியா, ஏற்கெனவே சீனத் தொழிலாளர்களுக்கு வர்த்தக விசாக்களை எளிமைப்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் முதலீடு தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து அது ஆராய்ந்து வருகிறது.

“சீனாவுக்கான விதிமுறைகளைத் தளர்த்துவதை ஆராய்ந்து வருகிறோம். ஆனால் இதற்கு சில காலமாகலாம். முதலில் விமானங்களுக்கான சேவைகள் தொடங்கப்பட்டன. விசாக்கள் வழங்கப்பட்டன. நிறுத்தப்பட்ட திட்டங்களுக்கு தொழில்நுட்ப வல்லுநர்களை அனுமதிக்கும் குடிநுழைவு விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. இப்படி படிப்படியாக நடைமுறைகள் இருக்கும்,” என்று அது பற்றி விவரமறிந்த அதிகாரி ஒருவர் கூறினார்.

முன்னதாக, நிதி ஆயோக் உறுப்பினர் ராஜீவ் கௌபா தலைமையிலான உயர்மட்டக் குழு, சீன முதலீடுகள் மீதான கட்டுப்பாடுகளை திரும்பப் பெறுவதற்கு பரிந்துரை செய்திருந்தது.

மேலும் 2023-24 ஆம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கையில் இந்திய ஏற்றுமதியின் போட்டித்தன்மையை வலுப்படுத்த சீன நிறுவனங்களிடமிருந்து முதலீட்டை ஈர்ப்பதற்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

கடந்த ஆண்டு புதுடெல்லி, பெய்ஜிங் இடையிலான உறவை சீர்செய்ய தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கைலாஷ் மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்குவது, நேரடி விமானச் சேவைகளை அறிமுகப்படுத்துவது, பத்திரிகையாளர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு விசா வழங்குவது, எல்லைகளைத் தாண்டிய நதிகள் பற்றிய தரவுகளைப் பகிர்ந்துகொள்வது இவற்றில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்