புதுடெல்லி: உலகளாவிய முதலீட்டு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி உள்ளடக்கிய நாடுகளில், ஆக வேகமாக வளர்ந்துவரும் பொருளியலாக இந்தியா தொடர்ந்து திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோர்கன் ஸ்டான்லியின் உலகளாவிய முதலீட்டுக்குழு வெளியிட்டுள்ள ஆக அண்மைய அறிக்கை, நாலாம் காலாண்டு அடிப்படையில் 2025ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.9 விழுக்காடாகவும் 2026ல் அது 6.4 விழுக்காடாகவும் இருக்கும் என முன்னுரைத்துள்ளது.
இதற்கிடையே, உலகளாவிய பொருளியல் வளர்ச்சி கணிசமாக மெதுவடையும் என அக்குழு எதிர்பார்க்கிறது. உலகளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024ல் 3.5 விழுக்காட்டிலிருந்து 2025ல் 2.5 விழுக்காடாகச் சரியும் என முன்னுரைக்கப்படுகிறது.
வர்த்தக வரிவிதிப்பு பல பொருளியல்களையும் ஒரே நேரத்தில் அநேகமாகப் பாதிக்கும் என்பதை அறிக்கை சுட்டியது. இதனால் தங்களது உத்தேச வளர்ச்சி அளவுக்குக்கீழ் பொருளியல்கள் சரியலாம்.
அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024ல் 2.5 விழுக்காட்டிலிருந்து 2025லும் 2026லும் வெறும் 1.0 விழுக்காடாகக் குறையும் என மோர்கன் ஸ்டான்லி எதிர்பார்க்கிறது.
சீனப் பொருளியலும் மெதுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரிவிதிப்பால் 2024வுடன் ஒப்பிடுகையில், 2025ல் வளர்ச்சி 0.5 விழுக்காட்டுப் புள்ளி குறைந்துள்ளது.

