புதுடெல்லி: இந்தியாவில் 36 இலக்குகளைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் செலுத்திய 400க்கும் மேற்பட்ட ஆளில்லா வானூர்திகளை (டிரோன்களை) இந்திய ராணுவம் வெற்றிகரமாக இடைமறித்து அழித்தது.
கடந்த சில நாள்களாக இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.
பாகிஸ்தான் மேற்கொள்ளும் ஒவ்வோர் நடவடிக்கைக்கும் இந்தியா தகுந்த, பலமான பதிலடியைக் கொடுத்து வருகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்னல் சோஃபியா குரேஷி, பாகிஸ்தான் இந்தியா மீது ஏறக்குறைய 400 ‘டிரோன்’களை ஏவியதாகவும் அவற்றை இந்திய ஆயுதப் படைகள் இயக்கவியல் மற்றும் இயக்கவியல் அல்லாத வழிமுறைகளைப் பயன்படுத்தி சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பின்போது, விங் கமாண்டர் வியோமிகா சிங், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் உடன் இருந்தனர்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகு, மேற்கு எல்லை முழுவதும் இந்திய வான்வெளியைப் பலமுறை அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது. இது மட்டுமல்லாமல், கட்டுப்பாட்டுக் கோட்டில் கனரக ஆயுதங்களையும் பாகிஸ்தான் ராணுவம் ஏவியது.
“இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளைச் சோதிக்கும் நோக்கிலும், உளவுத் தகவல்களை சேகரிக்கும் நோக்கிலும் பாகிஸ்தான் இத்தகைய பெரிய அளவிலான வான்வழி ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
“பாகிஸ்தான் பயன்படுத்திய டிரோன்களின் உடைந்த பாகங்கள் குறித்து தடயவியல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப அறிக்கைகளின்படி, அவை துருக்கி நாட்டின் அசிஸ்கார்டு சோங்கர் டிரோன்கள் என்பது தெரிய வந்துள்ளது,” என்றார் கர்னல் சோஃபியா குரேஷி.
தொடர்புடைய செய்திகள்
இந்திய பதிலடித் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவமும் பெரும் இழப்புகளைச் சந்தித்ததாக ‘விங் கமாண்டர்’ வியோமிகா சிங் தெரிவித்தார்.
“பாகிஸ்தானில் உள்ள நான்கு வான் பாதுகாப்புத் தளங்கள் மீது ஆயுதமேந்திய டிரோன்கள் ஏவப்பட்டன. அவற்றில் ஒன்று பாகிஸ்தானின் ஏடி ரேடாரை அழித்தது. கனரக பீரங்கி துப்பாக்கிகள், ஆயுதமேந்திய டிரோன்களைப் பயன்படுத்தி கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி பீரங்கித் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது. இதன் விளைவாக இந்திய ராணுவ வீரர்களுக்கு சில இழப்புகள், காயங்கள் ஏற்பட்டன,” என்று வியோமிகா சிங் கூறியுள்ளார்.
அமிர்தசரஸ் போன்ற நகரங்களை இந்திய ராணுவம்தான் குறிவைத்தது என பாகிஸ்தான் கூறுவது அபத்தமான, மூர்க்கத்தனமான கருத்து என்று இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
“டிரோன் தாக்குதல் மூலம் நான்காமா சாஹிப் குருத்வாராவை இந்தியா குறிவைத்ததாக பாகிஸ்தான் தவறான தகவலைப் பரப்பியது. இது மற்றொரு அப்பட்டமான பொய். வகுப்புவாத மோதலை உருவாக்கும் நோக்கத்துடன் இத்தகைய வகுப்புவாத சாயலை சேர்க்க பாகிஸ்தான் தீவிரமாக முயற்சி செய்கிறது” என்று குற்றம்சாட்டினார் விக்ரம் மிஸ்ரி.