புதுடெல்லி: இதுவரை இல்லாத அளவாக, ஒரு மில்லியன் நேரடி வேலைவாய்ப்புகளை அள்ளித் தரும் இலக்குடன் இந்திய-ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான முக்கிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்திய தலைநகர் புதுடெல்லியில் கடந்த ஆண்டு கையெழுத்தான இந்த ஒப்பந்தம் தற்போது செயலாக்கம் கண்டுள்ளதையடுத்து, ஏறத்தாழ 100 பில்லியன் அமெரிக்க டாலர் (S$130 பில்லியன், ரூ.8.80 லட்சம் கோடி) முதலீடுகளுக்கான கடப்பாடுகளை அது சாத்தியமாக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய-ஐரோப்பிய நாடுகளுக்கிடையே தடையற்ற வர்த்தக, பொருளியல் ஒத்துழைப்புகளுக்கு வகைசெய்யும் இந்த ஒப்பந்தம் (டிஇபிஏ) இம்மாதம் முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளதாக இந்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
புவிசார் அரசியல் பதற்றநிலை, மாறிவரும் பொருளியல் சூழல்களுக்கு இடையில் எட்டப்பட்டுள்ள இந்த வர்த்தக உடன்பாடு, முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு வலுவாக வித்திடும் வகையில் பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது .
நான்கு ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்போடு இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, சுவிஸ் ஒயின் மற்றும் சாக்லேட்டுகள் இந்தியாவில் இனி மலிவாகக் கிடைக்கும்.
பதினான்கு அத்தியாயங்கள் அடங்கிய இந்த உடன்பாட்டில் பொருள்களுக்கான சந்தை வாய்ப்புகள், வர்த்தக வசதிகள், வணிகத் தீர்வுகள், முதலீடுகளைப் பேரளவில் ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள், பல்வேறு சேவைகளுக்கான சந்தை வாய்ப்புகள், அறிவுசார் சொத்துரிமை, நீடித்த நிலையான வளர்ச்சி, அவை தொடர்பிலான சட்டபூர்வ நடைமுறைகள் குறித்த பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த ஒப்பந்தம் 100 விழுக்காடு விவசாயம் சாராத பொருள்களுக்கான சந்தை வாய்ப்புகளை உள்ளடக்கிய வகையில் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐஸ்லாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து, லீச்டென்ஸ்டீன் உள்ளிட்ட நான்கு ஐரோப்பிய நாடுகளுடன், இந்தியா கடந்த ஆண்டு மார்ச் மாதம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அந்நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பல்வேறு பொருள்களுக்கான சுங்க வரியை இந்தியா அடுத்த 10 ஆண்டுகளில் படிப்படியாகத் தளர்த்தவும் அந்த ஒப்பந்தம் வழிவகுத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
உலக அளவில் விரைவாக வளர்ந்துவரும் பொருளியலாகக் கருதப்படும் இந்தியாவின் முன்னேற்றத்தில் இந்த ஒப்பந்தம் பேரளவிலான ஆக்ககர மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அனைத்துலக அரசியல் வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.