இந்தியாவில் யானைகள் தங்கள் வாழ்விடங்களை இழந்து வருகின்றன

2 mins read
ccd6c72f-cec9-4faf-9f68-a212454cae66
டிசம்பர் 20ஆம் தேதி அன்று, அசாமில் 50 யானைகள் கூட்டத்தின் மீது அதிவேக பயணிகள் ரயில் மோதியதில் நான்கு யானைக் கன்றுகளும் ஒரு கர்ப்பிணிப் பெண் யானை உட்பட ஏழு யானைகள் கொல்லப்பட்டன. - படம்: ராய்ட்டர்ஸ்

பெங்களூர்: ரயில்கள், யானைகள் சம்பந்தப்பட்ட தொடர்ச்சியான விபத்துகள், இந்தியாவில் யானைகள் வழித்தடங்களிலும் காடுகளிலும், சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் அமைக்கப்படுவதன் அபாயத்தை அதிகப்படுத்தியுள்ளன.

விலங்குகள் கடக்கும் பகுதிகளாக அறியப்பட்ட பாதைகளை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்று உள்ளூர்வாசிகளும் வனவிலங்கு நிபுணர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

அவ்வாறு செய்யத் தவறினால், அதிக இறப்புகள் ஏற்படும் அபாயமும், மேலும் யானைகள் பண்ணைகளுக்கும் குடியிருப்புகளுக்குள்ளும் ஊடுருவும் அபாயமும் உள்ளது என்று வலியுறுத்தப்படுகிறது.

டிசம்பர் 20ஆம் தேதி அன்று, வடகிழக்கு இந்திய மாநிலமான அசாமில் 50 யானைகள் கொண்ட கூட்டத்தின் மீது அதிவேக பயணிகள் ரயில் மோதியதில் நான்கு யானைக் கன்றுகளும் ஒரு கர்ப்பிணிப் பெண் யானை உட்பட ஏழு யானைகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கவலைகள் எழுந்துள்ளன.

2025ஆம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த இதுபோன்ற நான்காவது துயரச் சம்பவம் இதுவாகும். சுற்றுச்சூழல், வனத்துறை, பருவநிலை மாற்ற அமைச்சின் தரவுகளின்படி, அண்மைய இறப்புகள் உட்பட, 2019 முதல் குறைந்தது 94 யானைகள் இப்படிப்பட்ட மோதல்களில் கொல்லப்பட்டுள்ளன.

“மிக அவசரமாக, விபத்துகளைத் தடுக்க வனத்துறை மற்றும் ரயில்வே துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்த வேண்டும்,” என்று யானைகள் இடம்பெயர்வைக் கண்காணிக்கும் சேஜ் அறக்கட்டளையின் நிறுவனர் திரு சாக்னிக் சென் கூறினார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு விமர்சனங்களை எதிர்கொண்ட வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே, வேகத் தடைகள், தாவரங்களை அகற்றுதல், தெளிவான எச்சரிக்கைப் பலகைகள் மற்றும் ஓட்டுநர்கள் மற்றும் ரயில் நிலையங்களில் விலங்குகள் நடமாட்டம் குறித்து நிகழ்நேரத்தில் கண்டறிந்து எச்சரிக்கும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அமைப்பைப் பயன்படுத்தி ரயில் தொடர்பான விபத்துகளில் இருந்து 160 யானைகளைக் காப்பாற்றியதாக ஓர் அறிக்கையை வெளியிட்டது.

ஆனால் இத்தகைய மோதல்கள் அதிகரித்து வருவதால், தற்போதுள்ள முறைகளின் செயற்பாட்டுத் திறன் குறைந்து வருவதைத் தெளிவாகக் காட்டுகின்றன என்று திரு சென் மேலும் கூறினார்.

உலகின் பெரும்பாலான உயிரினங்களைக் கொண்ட உலகின் 17 பன்மயமான நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் செயல்பாட்டு முறைகள் இல்லாமல், நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள் மற்றும் பிற பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களால் தனிமைப்படுத்தப்படும் வனவிலங்குகள் அழிந்து போகக்கூடும்.

வனவிலங்கு நடமாட்ட பாதைகளின் எண்ணிக்கை குறைவாகக் கணக்கிடப்படலாம் என்ற கவலையும் உள்ளது. எடுத்துக்காட்டாக, 27 அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட புலி வழித்தடங்கள் உள்ளன. இருப்பினும், 30 புலிகள் காப்பகங்களில் பதிவு செய்யப்பட்ட 192 புலிகள் வழித்தடங்கள் உள்ளன என்று தரவுகள் காட்டுகின்றன.

அறியப்பட்ட 150 யானை வழித்தடங்களில், மோதல் நடந்த அசாமில் உள்ளதைப் போன்ற புதிய வழித்தடங்கள் இல்லை என்று திரு சென் சுட்டிக்காட்டினார்.

“யானைகள் இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், அண்மைய வழித்தடங்களைக் கண்டறிந்து நாம் வரைபடமாக்க வேண்டும். யானைகளின் நடமாட்டம் மாறிக்கொண்டே இருக்கிறது. மேலும் புதிய வழித்தடங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சாத்தியமான மோதல்களைத் தடுக்க சரியான முறைகளை வகுக்க வேண்டும்.” என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் திரு சென் கூறினார்.

குறிப்புச் சொற்கள்