ஆசியாவின் மூன்றாவது பெரிய சக்தியாக இந்தியா உருவெடுப்பு

ஆசியாவின் மூன்றாவது பெரிய சக்தியாக இந்தியா உருவெடுப்பு

கோப்புப் படம்: டிடி நியூஸ்

24 Nov 2026 - 6:17 pm

2 mins read

புதுடெல்லி: ஆசிய வட்டாரத்தில் மூன்றாவது மிகப்பெரிய சக்தியாக இந்தியா தனது இடத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ‘லோவி இன்ஸ்டிடியூட்’ வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டுக்கான ‘ஆசிய அதிகாரக் குறியீடு’ அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வட்டார அளவில் மிகத் திறம்பட செயல்படும் தலைவர்கள் பட்டியலில், சீன அதிபர் ஸி ஜின்பிங்கிற்கு அடுத்தபடியாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

சீனாவுடனான இடைவெளி குறைப்பு

2018ஆம் ஆண்டு இந்தக் குறியீடு தொடங்கப்பட்டதில் இருந்து, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான அதிகார இடைவெளி தற்போது மிகக் குறைவான புள்ளிகளாகப் பதிவாகி உள்ளது.

எனினும், ஒட்டுமொத்த அதிகாரப் புள்ளிகளில் இந்தியாவைவிட சீனா 80 விழுக்காடு முன்னிலையில் உள்ளது.

மொத்தமுள்ள எட்டு அளவுகோல்களில், ஐந்து பிரிவுகளில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது.

குறிப்பாக, ராணுவ ஒத்துழைப்பு, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான ‘பிரம்மோஸ்’ ஏவுகணை விற்பனை ஆகியவை பாதுகாப்பு கட்டமைப்பில் இந்தியாவை 9வது இடத்திற்கு உயர்த்தியுள்ளன. கலாசார செல்வாக்கிலும் இந்தியா 43.8 புள்ளிகளுடன் கணிசமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

அதேநேரம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வெளிநாட்டு முதலீடுகளில் ஏறக்குறைய 20 பில்லியன் அமெரிக்க டாலர் சரிவு, வளைகுடா மோதலின்போது இந்தியா காட்டிய குறைவான அரச தந்திர ஈடுபாடு ஆகியவை சில பின்னடைவுகளாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

எனினும், மற்ற ஆசிய நாடுகளைவிட இந்தியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளதாக அவ்வறிக்கை கூறுகிறது.

அமெரிக்கா-சீனா போட்டி

மத்திய கிழக்கு விவகாரங்களில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் கவனம் திரும்பியுள்ளதால், ஆசியாவில் அமெரிக்காவின் செல்வாக்கு சற்று குறைந்துள்ளது.

இதைப் பயன்படுத்தி சீனா (73.6 புள்ளிகள்), அமெரிக்காவுக்கும் (78.9 புள்ளிகள்) தனக்கும் இடையிலான ராணுவ, அதிகார இடைவெளியை 5.3 புள்ளிகளாகக் குறைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்