அனைத்து ஒப்பந்தங்களுக்கும் ‘தாய்’

இந்திய-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து வணிகத்துறைச் செயலாளர்

அனைத்து ஒப்பந்தங்களுக்கும் ‘தாய்’

2 mins read
cd39209e-c732-4bf4-8b63-8c1c7e023aba
ராஜேஷ் அகர்வால். - படம்: என்டிடிவி

புதுடெல்லி: இந்திய-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் உலக பொருளியலில் நான்கில் ஒரு பங்கை ஈர்க்கும் என எதிர்பார்ப்பதாக இந்திய வணிகத்துறைச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இருதரப்புக்கும் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தமானது, ‘அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய்’ என்பதே உண்மை என்றும் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

வர்த்தகத்துறையில் மொத்த உலகமும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் இன்றைய சூழலில், இந்த ஒப்பந்தம் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுவதாக ராஜேஷ் அகர்வால் கூறினார்.

“மக்கள் உலகளாவிய வர்த்தகத்தில் அதிக கொந்தளிப்புகளையும் சவால்களையும் எதிர்கொள்கின்றனர். ஒரு தரப்பு வயதான மக்கள்தொகையையும் மற்றொரு தரப்பு இளம் மக்கள்தொகையையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

“நீங்கள் பொருள்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள் எனில் நான் தேவையை முன்வைக்கிறேன். நீங்கள் தொழில்நுட்பத்தை முன்னிலைப்படுத்துகிறீர்கள். நாங்கள் திறமையை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம்,” என்றார் ராஜேஷ் அகர்வால்.

இரு தரப்பினரும் இந்திய, ஐரோப்பிய சந்தைகள் மட்டுமில்லாமல் உலகின் பெரும்பாலான பகுதிகளுக்கு வர்த்தக ரீதியில் சேவையளிக்க முடியும் என்று தாம் நம்புவதாகக் குறிப்பிட்ட அவர், உலகப் பொருளியலில் நான்கில் ஒரு பங்கை இந்த ஒப்பந்தம் ஈர்க்கும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை, ஏறக்குறைய 18 ஆண்டுகளுக்கு முன்பு (2007) தொடங்கியது.

பல்வேறு காலகட்டங்களில் இருதரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தாலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த மாதம்தான் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

டெல்லியில் இதற்கான பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் 93% பொருள்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் வரிவிலக்கு அளிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.

அதேபோல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் 90% பொருள்களுக்கு 10 ஆண்டு காலத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்படும்.

மேலும், இருதரப்பிலும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

தடையற்ற மக்கள் போக்குவரத்தை உறுதிப்படுத்தும் வகையில், பாதுகாப்பு கூட்டுறவு ஒப்பந்தம், தடையற்ற மக்கள் போக்குவரத்துக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின.

குறிப்புச் சொற்கள்