புதுடெல்லி: இந்தியா இந்த ஆண்டு $200 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குறுந்தொலைவு ஏவுகணைகளை பிலிப்பீன்சுக்கு விற்பனை செய்யக்கூடும் என்று இந்தியத் தரப்புத் தகவல் ஒன்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
சீனா-பிலிப்பீன்ஸ் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் இரண்டாவது பெரிய தற்காப்பு ஆயுத ஏற்றுமதி இதுவாகும்.
இந்தியாவில் உள்ள தற்காப்பு ஆராய்ச்சி அமைப்பு ஆகாஷ் என்னும் ஏவுகணையை உருவாக்கி உள்ளது. அதனை வாங்க பிலிப்பீன்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் தொடங்கும் நிதி ஆண்டில் ஆகாஷ் ஏவுகணையை வாங்குவதற்கான அதிகாரத்துவ அறிவிப்பை வெளியிட இருப்பதாக புதுடெல்லியிடம் பிலிப்பீன்ஸ் தெரிவித்து உள்ளது. இதனை மூன்றுவிதமான இந்தியத் தரப்புகள் ராய்ட்டர்சிடம் கூறியுள்ளன.
இந்த விவகாரம் மிகவும் ரகசியமானது என்பதால் அந்த மூன்று தரப்புகளும் ஆதாரம் எதுவுமின்றி தகவலை மட்டும் தெரிவித்து உள்ளன.
தரையில் இருந்து விண்ணுக்கு 25 கிலோமீட்டர் தூரம் (16 மைல்)பாயக்கூடிய அந்த ஏவுகணை கடந்த ஆண்டு ஆர்மினியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
$230 மில்லியன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்த நாட்டுக்கு அது விற்கப்பட்டதாகத் தகவல்கள் கூறின.
பிலிப்பீன்சுக்கான ஏற்றுமதி இதைவிடப் பெரிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், எத்தனை ஏவுகணைகள் என்பதையும் அதனுடன் இணைந்த ரேடார்ஸ் உள்ளிட்ட பிற சாதனங்கள் எத்தனை என்பதையும் அவர்கள் தெரிவிக்கவில்லை.
ஏவுகணைகளை இந்தியாவின் பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மணிலாவில் நடைபெறும் ஆசிய தற்காப்பு மற்றும் பாதுகாப்புக் கண்காட்சியில் அந்த நிறுவனமும் காட்சிக் கூடத்தை அமைத்துள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி வெளியானாலும், பிலிப்பீன்சுக்கு ஏவுகணைகளை விற்பது தொடர்பாக இந்தியத் தற்காப்பு அமைச்சோ பாரத் டைனமிக்ஸ் நிறுவனமோ எந்தவிதமான அதிகாரபூர்வத் தகவல்களையும் வெளியிடவில்லை.
சீனாவின் ராணுவப் பலத்தை எதிர்க்கும் ஆற்றலைத் தனது ராணுவம் கொண்டிருக்க வேண்டும் என்று பிலிப்பீன்ஸ் விரும்புகிறது. இதற்காக, அடுத்த பத்தாண்டுகளில் தனது ராணுவத்தை வலுப்படுத்த US$35 பில்லியனை (S$47.4 பில்லியன்) அது ஒதுக்கியுள்ளது.
தனது தற்காப்பு ஆற்றலை வலுப்படுத்த இடைதூர ஏவுகணைகளையும் குறைந்தது 40 போர் விமானங்களையும் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக பிலிப்பீன்ஸ் முன்னதாகத் தெரிவித்திருந்தது.
தென்சீனக் கடற்பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதாக பிலிப்பீன்சின் ஆயுதப் படைத் தலைவர் ஜெனரல் ரோமியோ பிராவ்னர் ஜூனியர் தெரிவித்துள்ளார்.