சென்னை: இந்திய ரயில் கட்டமைப்பு முழுவதையும் மின்மயமாக்கவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதற்கான பணிகளில் 96 விழுக்காடு நிறைவடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அனைத்துலகச் சந்தைகளின் பக்கம் இந்திய ரயில்வே திரும்பியுள்ளது. அவ்வகையில், ஆப்பிரிக்க நாடுகளுக்கு டீசல் இயந்திரங்களை ஏற்றுமதி செய்ய அது திட்டமிட்டுள்ளது.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் நம்பகத்தன்மைமிக்க ரயில் போக்குவரத்திற்கான தேவை அதிகரித்துவரும் நிலையில், அதனை ஈடுசெய்யும் நோக்கத்துடன் இந்திய ரயில்வே டீசல் இயந்திரங்களை ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக, ஆப்பிரிக்காவிலுள்ள எஃகு, சுரங்கத் தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காக 20 டீசல் இயந்திரங்களை இந்தியா ஏற்றுமதி செய்யவுள்ளது. அதற்கான ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.50 கோடி (S்$7.97 மில்லியன்) எனக் கூறப்படுகிறது.
அவ்வியந்திரங்களின் ஆயுட்காலம் 15 முதல் 20 ஆண்டுகள் என்றும் ஆப்பிரிக்க நாடுகளின் குறிப்பான தேவைகளுக்கு ஏற்ப அவை சற்று மாற்றத்துடன் வடிவமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
‘ரைட்ஸ்’ (RITES) எனப்படும் இந்திய ரயில் தொழில்நுட்ப, பொருளியல் சேவைகள் நிறுவனம் அவ்வியந்திரங்களை ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்கும்.
அந்த டீசல் இயந்திரங்கள் குறிப்பாக தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பயன்படுத்தப்படும். இந்தியாவிலுள்ள 1.6 மீட்டர் அகலப் பாதைகளைப் போலல்லாமல், அந்நாடுகளில் தண்டவாளங்கள் 1.06 மீட்டர் அகலத்துடன் கூடிய குறுகிய பாதைகளே உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
ஆகையால், அக்குறுகிய பாதைகளுக்கு ஏற்ற வகையில் இயந்திரங்களை உருவாக்க, அவற்றின் அச்சாணிகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆப்பிரிக்கச் சந்தைக்கு ஏற்ற வகையில் டீசல் இயந்திரங்களை மறுவடிவமைப்பு செய்யும் பணிகளை ‘ஆர்டிஎஸ்ஓ’ (RDSO) எனப்படும் ஆய்வு வடிவமைப்பு, தரநிலைகள் நிறுவனம் மேற்கொள்ளும்.
தேவையான மாற்றங்களை கோல்கத்தாவிலுள்ள ‘சித்தரஞ்சன் லோக்கோ ஒர்க்ஸ்’ நிறுவனம் மேற்கொள்ளும் என்று சென்னை பெரம்பூர் லோக்கோ ஒர்க்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

