மும்பை: இந்தியாவில் தற்போது மின்னிலக்கப் பணப் பரிவர்த்தனை முறை அதிகரித்து வருகிறது. அனைத்து இடங்களிலும் பணத்தை நேரடியாகப் பயன்படுத்துவது குறைந்துள்ளது.
இருப்பினும், சில நேரங்களில் பணத்தை ரொக்கமாகத் தரவேண்டிய சூழல் உருவாகிறது.
ஆகையால், தானியங்கிப் பண இயந்திரத்தின் சேவை (ஏடிஎம்) மிக முக்கியமாகக் கருதப்படுகிறது.
இதுவரை ரயில் நிலையங்கள், பொது இடங்களில் வழங்கப்பட்ட ‘ஏடிஎம்’ சேவை தற்போது நாட்டிலேயே முதன்முறையாக ரயிலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய ரயில்வே துறை சாா்பில் மகாராஷ்டிர மாநிலத்தில் இயக்கப்படும் பஞ்சவாடி விரைவு ரயிலில் சோதனையோட்டமாக ‘ஏடிஎம்’ இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
தனியாா் வங்கி சாா்பில் குளிா்சாதன வசதியுள்ள ரயில் பெட்டியில் அவை பொருத்தப்பட்டுள்ளன. பயணிகள் மத்தியில் இத்திட்டத்துக்கு உள்ள வரவேற்புக்கு ஏற்றவாறு பிற ரயில்களிலும் அச்சேவையை விரிவுபடுத்தப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.
“சில இடங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ‘ஏடிஎம்’ இயந்திரம் இயங்கவில்லை. சுரங்கப் பாதை வழியாக ரயில் செல்லும்போது அவற்றைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. மற்றபடி ரயிலில் இயந்திரங்களைப் பொருத்துவதிலும் அவற்றின் செயல்பாட்டிலும் எந்தவொரு பிரச்சினையும் ஏற்படவில்லை,” என அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும், ‘பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா’ வங்கியுடன் இணைந்து அச்சேவையை மத்திய ரயில்வே துறை வழங்குகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதற்காக, பெட்டிகளில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்பு, பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்கள் வைக்கப் பயன்படுத்தப்பட்ட இடத்தில் தற்போது உள்ளது.
மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திலிருந்து நாசிக் அருகேயுள்ள மனாமத் சந்திப்புக்குப் பஞ்சவாடி விரைவு ரயில் செல்கிறது. அனைத்து நாள்களிலும் இயக்கப்படும் அந்த ரயில், நாள்தோறும் கிட்டத்தட்ட, 258 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது.