இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 106 லட்சம் டன் கூடியது: வேளாண் அமைச்சர்

இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 106 லட்சம் டன் கூடியது: வேளாண் அமைச்சர்

படம்: ஏஎஃப்பி

19 May 2025 - 7:24 pm

1 mins read

புதுடெல்லி: இந்தியாவின் மொத்த உணவு தானிய உற்பத்தி, 2024/25 நிதியாண்டில் 106 லட்சம் டன்னுக்குமேல் கூடி 1,663.91 லட்சம் டன்னாக பதிவானதாக இந்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் திங்கட்கிழமை (மே 19) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், “2023/24 நிதியாண்டில் மொத்த உணவு தானிய உற்பத்தி ஏறத்தாழ 1,557.6 லட்சம் டன்னாக இருந்தது. 2024/25ல் இது 1,663.91 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது என்பதை நான் பெருமிதத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார்.

உலகின் ஆகப்பெரிய உணவு தானிய உற்பத்தியாளராக இந்தியாவை ஆக்குவதே தமது அமைச்சின் இலக்கு என்று திரு சவுகான் எடுத்துரைத்தார்.

“எங்களது உணவு தானிய உற்பத்தி அதிகரித்து வருகிறது. எனினும், இதோடு நாங்கள் நிறுத்திவிட விரும்பவில்லை. எங்கள் நாட்டின் தேவைகளைப் பூர்த்திசெய்வதோடு மற்ற நாடுகளுக்கும் தானியங்களை ஏற்றுமதி செய்ய விரும்புகிறோம்,” என்றார் அவர்.

தானிய உற்பத்தியை அதிகரிக்க உயர்தர நெல் வகை, மண் சோதனை, உற்பத்திச் செலவினக் குறைப்புக்கான அவசியத்தை விவசாயிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்று திரு சவுகான் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்
உணவுஉற்பத்திவிவசாயி