மும்பை: இந்திய ரூபாய்க்கு எதிரான ஊக வணிகத்தைக் கட்டுப்படுத்த இந்திய மத்திய வங்கி (Reserve Bank of India) கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிலான மிக வலுவான நடவடிக்கையை எடுத்துள்ளது. திங்கட்கிழமை (மார்ச் 30) காலைவணிகத் தொடக்கத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை ஒரு அமெரிக்க டாலருக்கு 94.81 ஆக இருந்த ரூபாயின் மதிப்பு, திங்கட்கிழமை காலை 93.56 ஆக உயர்ந்தது. இது ஒரே நாளில் 125 காசுகள் உயர்வு என்று புளூம்பெர்க் தரவு தெரிவித்தது.
ஆனால், பகல் 11.50 நிலவரப்படி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 94.66 ஆக மீண்டும் சரிந்தது.
மார்ச் 27ஆம் தேதி சந்தை நேரத்திற்குப் பிறகு மத்திய வங்கி வெளியிட்ட உத்தரவின்படி, வங்கிகள் வணிக நேர முடிவில் வைத்திருக்கக்கூடிய அந்நியச் செலாவணி அளவை 100 மில்லியன் அமெரிக்க டாலராகக் கட்டுப்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 10 முதல் நடைமுறைக்கு வரும் இந்த புதிய விதிகள், வங்கிகள் ரூபாய்க்கு எதிராகத் தன்னிச்சையாக மேற்கொள்ளும் பெரிய அளவிலான வணிகங்களைக் குறைக்க வழிவகுக்கும்.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலால் கடந்த சில நாள்களாக ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது.
ஈரான் போர் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட 4 விழுக்காட்டிற்கும் மேல் சரிந்து, ஆசியாவிலேயே மிக மோசமாகச் செயல்படும் நாணயமாக மாறியிருந்தது.
இதனால் மார்ச் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் மட்டும் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 30 பில்லியன் டாலர் வரை குறைந்தது.
தொடர்புடைய செய்திகள்
மேற்கு ஆசிய போர் காரணமாக ஏற்பட்டிருக்கும் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் ஏற்பட்ட வெளிநாட்டு நிதி வெளியேற்றம், இந்திய ரூபாயின் சரிவுக்கு முக்கிய காரணமாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய சூழலில், அனைத்துலக சந்தைகளில் நிலவும் அழுத்தத்தைக் குறைத்து ரூபாயின் நிலையை உறுதிப்படுத்த மத்திய வங்கி இந்த நேரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இது இந்தியப் பொருளியல் மீதான நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்த உதவும் என்றும், நிலைமையைச் சம்பந்தப்பட்ட அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

