76 நாள்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது: இந்தியா

76 நாள்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது: இந்தியா

2 mins read
40df4bf2-40e5-4e54-8aa6-5a87c33e2e51
76 நாள்கள் முதல் 80 நாள்கள் வரை நுகர்வோர்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக திரு.ஹர்தீப் சிங் கூறியுள்ளார். - கோப்புப் படம்: இந்தியா டுடே

புதுடெல்லி: இந்தியாவிடம் 76 நாள்களுக்குத் தேவைப்படும் எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக அந்நாட்டின் பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்துள்ளார்.

எனவே, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் என்னாகுமோ என்று கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் காரணமாக உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து முடங்கும் சூழலும் காணப்படுகிறது.

இதனால் அடுத்து வரும் மாதங்களில் எரிபொருள் தட்டுப்பாட்டை எவ்வாறு சமாளிப்பது எனத் தெரியாமல் உலக நாடுகள் பலவும் கவலையில் மூழ்கியுள்ளன. இதே கவலை இந்தியாவுக்கும் உள்ளது. எனவே அவ்வாறான சூழல் ஏற்பட்டால் இரண்டரை மாதங்களுக்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் நிலைமையைச் சமாளித்துவிடலாம் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போதிலும், இந்தியாவில் நெருக்கடி ஏதுமில்லை என்று அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்துள்ளார். தற்போது எரிபொருள் விலைகள் குறையக்கூடும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்தியா தனது ஏற்றுமதி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டாலும் 30 முதல் 60 நாள்கள் வரை பெட்ரோலியப் பொருள்கள், சுத்திகரிப்புக்குத் தேவையான பொருள்கள் போதிய அளவில் இருப்பில் உள்ளன. கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டால் அதைச் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது,” என்றார் அமைச்சர் ஹர்தீப்சிங் புரி.

76 நாள்கள் முதல் 80 நாள்கள் வரை நுகர்வோர்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மொசாம்பிக் நாட்டில் இருந்து கிடைக்கும் கூடுதல் எரிவாயு இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த உதவும் என்றும் திரு ஹர்தீப்சிங் புரி தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்