ரஷ்ய எண்ணெய்யை வாங்க இந்தியாவிற்கு அமெரிக்கா 30 நாள் அனுமதி

ரஷ்ய எண்ணெய்யை வாங்க இந்தியாவிற்கு அமெரிக்கா 30 நாள் அனுமதி

2 mins read
26417869-731d-4b1e-a3b1-236a924474ab
ரஷ்ய எண்ணெய்யை இந்தியா வாங்கும் வகையில் ஏப்ரல் 3ஆம் தேதிவரை விலக்கு அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில், இந்திய எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்ய எண்ணெய்யை வாங்குவதற்கு 30 நாள் தற்காலிக விலக்கு அளிப்பதாக அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் அறிவித்துள்ளார்.

வியாழக்கிழமை (மார்ச் 5) நிலவரப்படி, கப்பல்களில் ஏற்றப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெய்யையும் பெட்ரோலியப் பொருள்களையும் இந்தியாவிற்கு விற்பனை செய்யவும் விநியோகிக்கவும் அனுமதிக்கும் வகையில், அமெரிக்க நிதித்துறையின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் அதற்கான உரிமத்தை வழங்கியுள்ளது.

பொருளியல் தடைகள் விதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்குச் சொந்தமான கப்பல்களில் இருக்கும் எண்ணெய் உள்ளிட்ட இந்த வணிகப் பரிமாற்றங்கள், வரும் ஏப்ரல் 3ஆம் தேதி வரை அனுமதிக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், உலக எரிசக்திச் சந்தையை நிலைப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவின் முக்கியத்துவத்தையும் திரு பெசன்ட் சுட்டினார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் எரிசக்தித் திட்டங்களால் எண்ணெய், எரிவாயு உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது. உலகச் சந்தையில் தடையின்றி எண்ணெய் கிடைப்பதை உறுதிசெய்ய, இந்திய நிறுவனங்களுக்கு 30 நாள் தற்காலிக விலக்கு அளிக்கப்படுகிறது. ஏற்கெனவே கடற்பரப்பில் தேங்கியுள்ள கொள்கலன் கப்பல்களில் உள்ள எண்ணெய்யை மட்டுமே இது அனுமதிப்பதால் இதன்மூலம் ரஷ்யாவிற்குப் பெரிய அளவில் நிதிப் பயன்கள் கிடைக்காது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இந்தியா, அமெரிக்காவின் மிக முக்கியமான பங்காளி. இனிவரும் காலங்களில் அமெரிக்க எண்ணெய்யை இந்தியா அதிக அளவில் வாங்கும் என எதிர்பார்க்கிறோம். உலக எரிசக்தியைத் தன்வசப்படுத்த ஈரான் முயன்றுவரும் நிலையில், இந்த இடைக்கால நடவடிக்கை அந்த நெருக்கடியைச் சற்றே தணிக்கும்,” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்