விண்வெளித் துறை முதலீட்டிற்கான உலகளாவிய விருப்பம் இந்தியா: அமைச்சர் ஜிதேந்திர சிங்

1 mins read
fc53b696-f3b5-4c0f-9dfa-1865f48ae28f
ஜிதேந்திர சிங். - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவின் விண்வெளி பயன்பாடுகளில் கிட்டத்தட்ட 70% நடவடிக்கைகள் மனித வாழ்க்கையை எளிதாக்கும் முயற்சியை ஆதரிப்பதாக உள்ளது என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற அனைத்துலக விண்வெளி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், அரசின் சீர்திருத்தங்கள், திறமை, தொழில்நுட்பம் மற்றும் முதலீடு ஆகியவை ஒன்றிணைந்து இந்தியாவின் விண்வெளிப் பொருளியலின் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்கக்கூடிய ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

விண்வெளி ஈடுபாட்டிற்கான உலகளாவிய மையமாக இந்தியா வளர்ந்து வருவதாகச் சுட்டிக்காட்டிய திரு ஜிதேந்திர சிங்,

விண்வெளித் துறையில் ஈடுபாடு மற்றும் முதலீட்டிற்கான உலகளாவிய விருப்பமான இடமாக இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாகக் கூறினார்.

“இந்தியா எப்போதுமே சிறந்த அறிவியல் திறனைக் கொண்டிருக்கிறது. எனினும், கொள்கை வகுப்பாளர்களால் புதுமை, பரந்த அளவிலான பங்கேற்பை ஊக்குவிக்கும் சூழல் உருவானபோது நாட்டில் திருப்புமுனை ஏற்பட்டது.

“நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டமிடலுக்கு ‘கதி சக்தி’, நில வரைபடத்திற்கும் செயற்கைக்கோள் மூலம் செயல்படுத்தப்பட்ட பேரிடர் மேலாண்மைக்கும் ‘ஸ்வாமித்வா’ ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன,” என்றார் அமைச்சர் ஜிதேந்திர சிங்.

இந்தியா இப்போது உலகம் முழுவதிலும் இருந்து விண்வெளித் துறையில் ஈடுபாடு மற்றும் முதலீட்டை ஈர்க்கத் தொடங்கி உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இந்நடவடிக்கை நாட்டின் எதிர்கால பொருளியல் வளர்ச்சிக்கு முக்கியமான பங்களிப்பாக இருக்கும் என்றார்.

குறிப்புச் சொற்கள்