தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகின் 4வது ஆகப்பெரிய பொருளியலாக உருவெடுத்த இந்தியா; ஜப்பானை விஞ்சியது

2 mins read
cad47494-ac63-4a6a-a6fe-ce2bfbcb2832
ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி, நான்காம் இடத்தைப் பிடித்து இந்தியா சாதித்துள்ளதாக பிவிஆர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: உலகின் நான்காவது ஆகப்பெரிய பொருளியலாக இந்தியா உருவாகி உள்ளது என நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி பிவிஆர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ள நிலையில், ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா நான்காம் இடத்தைப் பிடித்து சாதித்துள்ளதாக அவர் கூறினார்.

கடந்த சனிக்கிழமையன்று நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுப்பிரமணியம், இந்தியாவின் பொருளியல் தற்போது 4 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்றும் அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி மட்டுமே இதேபோன்ற பெரிய பொருளியலைக் கொண்டுள்ளன என்றும் கூறினார்.

அனைத்துலக நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உலக நாடுகளின் நிதி நிலை, பொருளியல் நிலவரங்கள் தொடர்பாக அவ்வப்போது ஆய்வறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில், அனைத்துலகப் பண நிதியம் வெளியிட்ட அண்மைய தரவுகளின் அடிப்படையில் ஜப்பானை இந்தியா விஞ்சிவிட்டதை உறுதி செய்ய முடிவதாக நிதி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரியான சுப்பிரமணியம் சுட்டினார்.

“நான் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் இந்தியாவின் பொருளியல் 4 டரில்லியன் மதிப்புடையதாக மாறியுள்ளது. இந்தத் தருணத்தில் ஜப்பானை விஞ்சி, உலகின் நான்காவது பெரிய பொருளியலாக இந்தியா உள்ளது,” என்று சுப்பிரமணியம் கூறியதாக பிடிஐ செய்தி முகவை தெரிவித்தது.

ஆப்பிள் நிறுவனம் இனி இந்தியாவிலோ அல்லது வேறு இடங்களிலோ ஐஃபோன்களை உற்பத்தி செய்யாமல், அதன் உற்பத்தியை அமெரிக்காவில் மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது குறித்து கருத்துரைத்த சுப்பிரமணியம், இதற்கான கட்டண முறை எவ்வாறானதாக இருக்கக்கூடும் எனத் தெளிவாகத் தெரியவில்லை என்றார்.

எனினும் உலக அளவில் உற்பத்திக்கு உகந்த இடமாக, குறைந்த உற்பத்தி செலவு உள்ள இடமாக இந்தியா உள்ளது என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்