புதுடெல்லி: அனைத்துலக அளவில் அதிவேகமாக வளரும் பொருளியலைக் கொண்ட நாடாக இந்தியா நீடிக்கும் என்று மார்கன் ஸ்டான்லியின் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அமெரிக்க நிறுவனமானது உலக நாடுகளின் பொருளியல் நிலைகுறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் அனைத்துலகப் பொருளியல் வளர்ச்சி மந்த கதியில் இருப்பதாகவும் முழுமையாக மீட்சி அடையவில்லை என்றும் மார்கன் ஸ்டான்லி கூறியுள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா உள்ளிட்டவை தங்களின் பொருளியல் வளர்ச்சியை அதிகரிக்க அதிக தொகையை செலவிட்டு வருவதாகவும் அதன் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அமெரிக்கா பல்வேறு நாடுகளுக்கான தனது வர்த்தக விதிப்பை அறிவித்ததன் காரணமாக, அந்நாட்டின் பொருளியல் திடீர் சரிவை எதிர்கொண்டதாகவும் இது உலகம் முழுவதும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்நிலையில், இந்தியாவின் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருகிறது. உள்நாட்டுச் சந்தையும் அபரிமிதமாக வளர்ச்சி கண்டு வருவதால் உலகின் அதிவேகமாக வளரும் பொருளியலைக் கொண்ட நாடாக இந்தியா நீடிக்கும் என மார்கன் ஸ்டான்லி ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் இந்தியாவின் பொருளியல் வளர்ச்சி 5.9 விழுக்காடாக இருக்கும் என்றும் 2026ஆம் ஆண்டு வளர்ச்சி விகிதம் மேலும் அதிகரித்து, 6.4%ஆக அதிகரிக்கும் என்றும் ஆய்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
“இந்நிலையில், அடுத்த ஆண்டு அமெரிக்காவின் பொருளியல் வளர்ச்சி ஒரு விழுக்காடாகவும் பண வீக்கம் 3 விழுக்காடாகவும் இருக்கக்கூடும்.
தொடர்புடைய செய்திகள்
“சட்டவிரோதக் குடியேறிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருவதால், அமெரிக்காவில் பணிகளைச் செய்ய ஊழியர் பற்றாக்குறை ஏற்படும். இதனால் அந்நாட்டின் பொருளியல் வளர்ச்சி மோசமாகப் பாதிக்கப்படலாம்.
“ஐரோப்பிய நாடுகளின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சீனாவில் வீட்டு வசதித்துறை பெரும் சரிவைச் சந்தித்து, பொருளியல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
“நடப்பாண்டில் சீனாவின் பொருளியல் வளர்ச்சி 4.5%ஆகவும் 2006ல் 4.4%ஆகவும் இருக்கக்கூடும்,” என்று மார்கன் ஸ்டான்லியின் அறிக்கையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, லத்தீன் அமெரிக்க நாடுகளின் பொருளியலில் தொடர்ந்து மந்தநிலை நீடிப்பதாகவும் ஜப்பானின் பொருளியல் வளர்ச்சி நடப்பாண்டில் 1%ஆகவும் அடுத்த ஆண்டு 0.5%ஆகவும் இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அமெரிக்காவின் வரிவிதிப்பு உள்ளிட்ட சில கொள்கை முடிவுகள் லத்தீன், அமெரிக்க நாடுகளின் பொருளியலைப் பாதித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

