புதுடெல்லி: ரஷ்யாவில் இருந்து புதைப்படிவ எரிபொருளை ஆக அதிகமாக வாங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது.
இந்தியாவில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகள் மாஸ்கோவில் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு மே மாதம் அதிகரித்தது என்றும் ஏறக்குறைய 6.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ரஷ்ய ‘ஹைட்ரோகார்பன்’களை இறக்குமதி செய்துள்ளது என்றும் ஐரோப்பாவின் எரிசக்தி மற்றும் தூய்மைக் காற்றுக்கான ஆராய்ச்சி மையம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்யைக் குறைந்த விலையில் தருகிறது ரஷ்யா. அதன் காரணமாக, ரஷ்ய எண்ணெய்யை இந்தியா அதிக அளவில் கொள்முதல் செய்கிறது.
புவிசார் அரசியல் அழுத்தங்கள், தடைகளுக்கு இடையே தள்ளுபடி விலையில் கிடைக்கும் ரஷ்ய கச்சா எண்ணெய் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்குப் பொருளியல் ரீதியில் பெரும் லாபத்தை ஈட்டித் தருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி மாதாந்திர அடிப்படையில், எட்டு விழுக்காடு அதிகரித்துள்ளது. அதேபோல், ரஷ்யாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் 21 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அம்மையம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
ரஷ்யாவிலிருந்து இறக்குமதியாகும் பல்வேறு பொருள்களில் 83 விழுக்காடு கச்சா எண்ணெய் ஆகும்.
மே மாதம் மட்டும் 4.8 பில்லியன் யூரோ மதிப்புள்ள கச்சா எண்ணெய்யைத் தவிர, 429 மில்லியன் யூரோ நிலக்கரி, 550 மில்லியன் யூரோ எண்ணெய் சார்ந்த பிற பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் மொத்த இறக்குமதியில் ரஷ்ய எண்ணெய்யின் பங்களிப்பு 38 விழுக்காடாக உயர்ந்துள்ள நிலையில், நாட்டின் ஆகப்பெரிய சுத்திகரிப்பு மையங்களில் ரஷ்ய எண்ணெய் வரத்து கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பாக, குஜராத்தில் உள்ள வாடினார் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏப்ரல் மாதத்தைவிட 36 விழுக்காடு அதிகமாகவும் ஜாம்நகர் சுத்திகரிப்பு வளாகத்தில் 14 விழுக்காடு அதிகமாகவும் எண்ணெய் வந்து சேர்ந்துள்ளது.
உலகளாவிய போர், பொருளியல் சூழல் காரணமாகப் பல்வேறு இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் 2025 நவம்பர் முதல் ரஷ்ய எண்ணெய்க் கொள்முதலைத் தற்காலிகமாகக் கைவிட்டன.
பின்னர் கடந்த மார்ச் மாதம் மீண்டும் கொள்முதலைத் தொடங்கியதை அடுத்து, நியூ மங்களூரில் 13 விழுக்காடு, விசாகப்பட்டினத்தில் 42 விழுக்காடு அளவிற்கு ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி உயர்ந்துள்ளது.
மேலும், ஒடிசாவின் பாரதீப் சுத்திகரிப்பு நிலையமும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகப்படியான ரஷ்ய கச்சா எண்ணெய்யை மே மாதத்தில் கையாண்டுள்ளது.
உலக அளவில் ரஷ்ய கச்சா எண்ணெய்யை அதிகமாக வாங்கும் நாடுகளில் சீனா முதல் இடத்திலும் இந்தியா அடுத்த இடத்திலும் உள்ளன.

