புதுடெல்லி: இந்தியாவில் பாஸ்மதி தவிர்த்த மற்ற அரிசி ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்களை மத்திய வா்த்தக அமைச்சில் பதிவுசெய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பாஸ்மதி தவிர்த்த அரிசி ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்கள், மத்திய வா்த்தக அமைச்சின்கீழ் செயல்படும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்திடம் (ஏபிஇடிஏ) பதிவு செய்யப்பட வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளது. ஒப்பந்தங்கள் பதிவுக்குப் பிறகே ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்படும் என்று வெளிநாட்டு வணிகத் தலைமை இயக்குநரகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து பாஸ்மதி தவிர்த்த அரிசியை இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளில் பங்ளாதேஷும் ஒன்று.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை இந்தியாவின் அரிசி ஏற்றுமதி மதிப்பு 4.7 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது. முந்திய நிதியாண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில், இது 6.4 விழுக்காடு அதிகம்.
இவ்வாறு பதிவு செய்வது, பாஸ்மதி தவிர்த்த அரிசி ஏற்றுமதிகளை அரசு சிறப்பாக மேற்பார்வையிடவும், ஏற்றுமதிக் கொள்கைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்யவும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பைப் பராமரிக்கவும், ஏற்றுமதியின் அளவு இலக்கைக் கண்காணிக்கவும் உதவும் என்று வர்த்தக அமைச்சு கூறியது. பஞ்சாப், ஹரியானா, வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் மழையால் வயல்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், குறிப்பிட்ட வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மாா்ச் 31 வரை இக்கட்டுப்பாடு தொடரும் என்று வெளிநாட்டு வணிகத் தலைமை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்திலிருந்து கற்கள் பதிக்காத வெள்ளி நகைகளின் இறக்குமதி அதிகரித்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.