புதுடெல்லி: இந்தியாவின் ‘பிரம்மோஸ்’ ஏவுகணைகளை இந்தோனீசியா வாங்க உள்ளதாக, இந்திய அரசு அதிகாரியை மேற்கோள் காட்டி ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜகார்த்தாவுக்கு இரண்டு நாள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து உருவாக்கிய ‘பிரம்மோஸ்’ ஏவுகணைகள், ‘அஸ்த்ரா’ வான் ஏவுகணைகளை இந்தோனீசியாவுக்கு இந்தியா வழங்குமென இந்திய அதிகாரி கூறியதாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) வெளியான அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரம்மோஸ் ஏவுகணைகளை இந்தியாவிடமிருந்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் மூன்றாவது நாடாக இந்தோனீசியா கையெழுத்திடுகிறது.
இந்த ஒப்பந்தமானது ஏறக்குறைய 630 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ளது என்றும் திரு மோடியின் தற்போதைய பயணத்தின்போது கையெழுத்தாக வாய்ப்புள்ளது என்றும் இந்திய வட்டாரங்கள் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது.
இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் ஆதிக்கம் செலுத்துவதில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
இவ்வேளையில், இந்த ஒப்பந்தமானது இந்தியாவின் தற்காப்புத் துறை ஏற்றுமதியின் பெரும் விரிவாக்கத்திற்கு உதவும் என்கிறார்கள் துறைசார்ந்த நிபுணர்கள். மேலும், தென்கிழக்கு ஆசியாவின் ஆகப்பெரிய பொருளியலுடனான உத்திபூர்வ உறவுகளை வலுப்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரம்மோஸ் ஏவுகணைகளைக் கொள்முதல் செய்வது தொடர்பாக இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும் என கடந்த மார்ச் மாதம் இந்தோனீசியா தெரிவித்திருந்தது.
அந்த ஒப்பந்தம் 200 முதல் 350 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ளதாக இருக்கும் என்றும் இந்தோனீசியத் தற்காப்பு அமைச்சு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டிருந்தது.
கடந்த ஆண்டு பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்களின் மீது இந்தியா நான்கு நாள் கடும் தாக்குதல் மேற்கொண்டபோது பிரம்மோஸ் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன.
அதன் பின்னர், அந்த ஏவுகணைகள் மீதான ஆர்வம் உலக நாடுகள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதன் எதிரொலியாக வியட்னாம், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளுக்கு பிரம்மோஸ் ஏவுகணைகளை விற்பதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
மேலும், ஐக்கிய அரபுச் சிற்றசுகள் உள்ளிட்ட ஆறு நாடுகள் அந்த ஏவுகணைகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றன.
இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவுடன் பிரதமர் மோடி நடத்தும் பேச்சுவார்த்தையின்போது கடல்சார் பாதுகாப்பு, தற்காப்புத் தொழில் ஒத்துழைப்பு, வட்டார இணைப்பு, இந்தோ-பசிபிக் பகுதியில் பரந்த அளவிலான உத்திபூர்வ ஒருங்கிணைப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என இந்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரம்மோஸ் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள், தனது ஏவுகணை திறன்களைப் படிப்படியாக விரிவுபடுத்த இந்தோனீசியாவுக்கு உதவும் என்றும் பல்வேறு கட்டங்களாக ஏவுகணைகளைக் கொள்முதல் செய்வதற்கேற்ப ஒப்பந்தம் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏவுகணை அமைப்புகள், துணை உட்கட்டமைப்பு, இயக்கும் பயிற்சி, பராமரிப்புச் வேவை, நீண்டகாலப் பயன்பாட்டிற்குத் தேவையான மற்ற தொழிலுநுட்ப உதவிகள் என இந்த ஒப்பந்தம் பல்வேறு அம்சங்களிலும் கவனம் செலுத்தும் என ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இந்தியா-இந்தோனீசியா இடையேயான வர்த்தகம் 2024-25ஆம் ஆண்டில் 28.15 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. ஆசியான் அமைப்பில் இந்தியாவின் இரண்டாவது ஆகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக இந்தோனீசியா உள்ளது.
இந்தோனீசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கான தமது பயணம் வட்டாரப் பாதுகாப்புக்கான பரஸ்பர தொலைநோக்குப் பார்வையை வலுப்படுத்தும் எனத் தமது பயணத்தைத் தொடங்கும் முன் பிரதமர் மோடி கூறியிருந்தார்.
சுதந்திரமான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் வட்டாரத்துக்கான உறுதிப்பாட்டையும் வலுப்படுத்தும் என்றும் திரு மோடி கூறினார்.

