புதுடெல்லி: விண்வெளியிலிருந்து கண்காணிக்கும் ஆற்றலை மேம்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
50க்கும் மேற்பட்ட உளவு செயற்கைக் கோள்களை அது விண்வெளிக்குப் பாய்ச்ச இருக்கிறது. அத்துடன் தனது தேசிய பாதுகாப்பு ஆற்றலை மேம்படுத்த இரவுநேரக் கண்காணிப்பு அம்சத்தையும் சேர்க்க இருக்கிறது.
2025ஆம் ஆண்டில் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு எதிராக எல்லைப் பகுதியில் போர் வெடித்தபோது சில பாதுகாப்புக் குறைபாடுகளை இந்தியா கண்டுபிடித்தது.
இதையடுத்து, அதைச் சரிசெய்து பாதுகாப்பை வலுப்படுத்த அது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம், உளவுத் தகவல்களை விரைவாகவும் முழுமையாகவும் பெற வெளிநாடுகளில் நிலையங்களை அமைப்பது தொடர்பாகப் பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து தகவல் தெரிவித்தவர்கள் தங்கள் பெயரை வெளியிட விரும்பவில்லை என்று புளூம்பர்க் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இந்த நிலையங்கள் மத்திய கிழக்கு, தென்கிழக்காசியா, ஸ்கேன்டினேவியா போன்ற இடங்களில் அமைக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.
ஆனால் அதற்கு அந்தந்த நாடுகளின் அரசாங்க அனுமதி தேவைப்படும்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, இந்தியா தனது சொந்த செயற்கைக் கோள்களைப் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இருள் சூழ்ந்திருக்கும் பகுதிகளைத் தெளிவாகக் காட்டுவதும் இதில் அடங்கும்.
பூமியில் அமைக்கப்படும் நிலையங்களைச் சார்ந்திருக்காமல் ஒரு செயற்கைக் கோளிலிருந்து இன்னொரு செயற்கைக் கோளுக்குத் தரவுகளை அனுப்பும் ஆற்றல் மேம்படுத்தப்படுகிறது.
முதலில் 52 செயற்கைக் கோள்களை இந்தியா பாய்ச்சும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றைப் பயன்படுத்தி தற்போது தன்னிடம் உள்ள தொழில்நுட்பம் அனுமதிப்பதைவிட கண்காணிக்கப்பட வேண்டிய இடங்களை இந்தியா அடிக்கடி கண்காணிக்கலாம்.
செயற்கைக் கோள்கள் பாய்ச்சப்படுவது விரைவுபடுத்தப்படக்கூடும் என்று 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியது. முதற்கட்ட செயற்கைக் கோள்கள் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் பாய்ச்சப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனது எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்த ஏறத்தாழ 150 புதிய செயற்கைக் கோள்களைப் பாய்ச்ச இந்தியா திட்டமிட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் வி. நாராயணன், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்ததாக மின்ட் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
150 செயற்கைக் கோள்களைப் பாய்ச்சுவதற்கு தோராயமாக 260 பில்லியன் ரூபாய் (S$3.65 பில்லியன்) செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

