முக்கியத் துறைகளில் இணைந்து செயல்பட இந்தியா, இத்தாலி இணக்கம்

முக்கியத் துறைகளில் இணைந்து செயல்பட இந்தியா, இத்தாலி இணக்கம்

2 mins read
53900c77-6878-4d0a-8963-b95921771b53
இந்தியதலைவர்களும் இணைந்து எழுதிய ஊடகக் குறிப்பு வெளியானது. - படம்: பிஐபி

ரோம்: இந்தியாவும் இத்தாலியும் முக்கியமான துறைகளில் இணைந்து செயல்படும் என்று அரசுப் பயணமாக இத்தாலி சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியைச் சந்தித்துப் பேசிய திரு மோடி, இருதரப்பு உறவுகள் மேலும் வலுவடையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு சிறப்பு உத்திபூர்வ பங்காளித்துவ நிலைக்கு உயர்த்தப்படும் என்றார் அவர்.

பின்னர் தலைவர்கள் இருவரும் இணைந்து எழுதிய ஊடகக் குறிப்பு வெளியானது.

அண்மைய ஆண்டுகளில் இந்தியா, இத்தாலி உறவு முன்னெப்போதும் இல்லாத வேகத்துடன் விரிவடைந்து தற்போது தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளது என்று ஊடகக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு, சுமுகமான நட்பிலிருந்து சுதந்திரம், ஜனநாயகம், எதிர்காலத்துக்கான பகிரப்பட்ட பார்வை ஆகிய விழுமியங்களில் வேரூன்றிய ஒரு சிறப்பு உத்திபூர்வ பங்காளித்துவமாக உருவெடுத்துள்ளது.

இரு நாடுகளின் பொருளியல், ஆற்றல் உள்ளிட்டவற்றை ஒன்றிணைப்பதன் மூலம் அந்தப் பங்காளித்துவம் ஒரு புதிய பரிமாணத்தைப் பெற்றுவருவதாக தலைவர்களின் ஊடகக் குறிப்பு தெரிவிக்கிறது.

மேலும், 21ஆம் நூற்றாண்டில் புதுமைகளைப் புகுத்தும் திறன், எரிசக்தி மாற்றங்களை நிர்வகிக்கும் திறன், உத்திபூர்வ இறையாண்மையை வலுப்படுத்தும் திறன் ஆகியவற்றைப் பொறுத்தே உறவுகள் அமையும் என்று இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.

“புதிய இலக்குகளைப் பின்பற்றுவதன் மூலமும் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருப்பதன் மூலமும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை இருதரப்பும் மீண்டும் வலியுறுத்தி உள்ளன.

“இத்தாலியின் வடிவமைப்பு, உற்பத்தித் திறனுக்கும் இந்தியாவின் பொருளியல் வளர்ச்சி, புத்தாக்கச் சூழலமைப்பு, தொழில்முனைவோர் பலம் ஆகியவற்றுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பை உருவாக்க இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன,” என்று தலைவர்கள் இருவரும் வெளியிட்ட ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்