புதுடெல்லி: அரிசி ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடையைத் தளர்த்துவது பற்றி இந்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வரும் அக்டோபரில் புது விளைச்சல் அரிசி சந்தைக்கு வந்துவிடும். அச்சூழலில் அரிசிக் கையிருப்பு மிதமிஞ்சிப் போவதைத் தவிர்க்க, குறிப்பிட்ட சிலவகை அரிசி ஏற்றுமதிக்கான தடை தளர்த்தப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.
வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு நிலையான வரி விதிப்பது குறித்தும் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
புழுங்கல் அரிசிக்கான 20 விழுக்காடு வரியை நீக்கிவிட்டு, அதற்கு நிலையான வரி விதிக்கப்படலாம் என்று பெயர் கூற விரும்பாத அதிகாரிகளைச் சுட்டி ‘இக்கனாமிக் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. இதன்மூலம் விலைப்பட்டியலில் சரக்குகளின் அளவை குறைத்துக் காட்டும் போக்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஆசிய அரிசிக்கான விலைகள் இவ்வாண்டு ஜனவரியில் உச்சம் தொட்டன. இந்நிலையில், அரிசி ஏற்றுமதிக்கான தடையை இந்தியா நீக்கினால் விலை குறையக்கூடும்.
அத்துடன், அரிசித் தேவைக்கு இந்தியாவையே பெரிதும் நம்பியிருக்கும் மேற்கு ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளுக்கும் அது நற்செய்தியாக அமையும்.
ஆயினும், உணவு, வணிக அமைச்சுகளைப் பிரதிநிதிக்கும் பேச்சாளர் உடனடியாக இதுபற்றிக் கருத்துரைக்க மறுத்துவிட்டார்.
இவ்வாண்டு ஏப்ரல், மே மாதங்களில் இந்தியா மொத்தம் 2.9 மில்லியன் டன் அரிசியை ஏற்றுமதி செய்தது. இது, 2023 ஏப்ரல் - மே காலகட்டத்தை ஒப்புநோக்க, 21% குறைவு. அதே காலகட்டத்தில், பாசுமதி தவிர்த்த அரிசி ஏற்றுமதி 32% குறைந்து, 1.93 மில்லியன் டன்னாகப் பதிவானதாக அரசாங்கத் தரவுகள் குறிப்பிடுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவில் நெல் விதைப்பு ஜூலை மாதத்தில் உச்சத்தில் இருக்கும். அறுவடை செப்டம்பர் பிற்பகுதியிலிருந்து தொடங்கும்.
2024 ஜூலை 8 நிலவரப்படி 14.8 மில்லியன் ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிடப்பட்டுள்ளது என்றும் இது ஓராண்டிற்கு முன்பிருந்ததைவிட 19% அதிகம் என்றும் வேளாண் அமைச்சுத் தரவுகள் தெரிவிக்கின்றன.