புதுடெல்லி: எதிர்வரும் சில மாதங்களில் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்காவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை இறுதிசெய்ய இந்தியா திட்டமிட்டுள்ளதாக மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வளர்ந்துவரும் பொருளியல் வலிமையைப் பயன்படுத்தி, உலகச் சந்தைகளை இந்தியா மீது சார்ந்திருக்கச் செய்ய வேண்டும் என அவர் இந்தியத் தொழில்துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்திய வர்த்தக, தொழில்துறை சம்மேளனத்தின் (FICCI) நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய திரு கோயல், ‘தற்சார்பு இந்தியா’ (ஆத்மநிர்பர் பாரத்) என்ற கருத்தாக்கம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு ‘சுதேசி’ இயக்கத்தில் தொடங்கி, தற்போது முழுமையடைந்துள்ளது என்றார்.
சுதேசி, ஆத்மநிர்பர் இரண்டும் ஒரே பொருளைக் கொண்டவை என்றாலும் அதைக் கடந்து ஒருபடி மேலே சென்று ‘உலகச் சந்தை நம்மைச் சார்ந்திருக்கச் செய்ய வேண்டும்’ என்பதே இன்றைய இலக்காக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
கடந்த நான்கரை ஆண்டுகளில் 38 வளர்ந்த நாடுகளுடன் ஒன்பது சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியா இறுதி செய்துள்ளதாகவும் அவை ஏறக்குறைய 60 டிரில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
2014ஆம் ஆண்டுக்கு முந்தைய ஒப்பந்தங்களையும் சேர்த்தால், ஏறக்குறைய 70 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளியலுக்கு இந்தியா முன்னுரிமைச் சந்தை அணுகலைப் பெற்றுள்ளது என்றும் விரைவில் மேலும் 15 டிரில்லியன் அமெரிக்க டாலர் இதில் இணையும் என்றும் அவர் கூறினார்.
போர்கள், புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், அக்டோபர் மாதத்தில் 90 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற சாதனை அளவிலான ஏற்றுமதியை இந்தியா எட்டியுள்ளது என்று திரு கோயல் சுட்டிக்காட்டினார்.
“அனைத்துலக நாணய நிதியம் உலகளாவிய வர்த்தக வளர்ச்சியை 1.9 விழுக்காடு எனக் கணித்திருந்த போதிலும், 2026-27 நிதியாண்டில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதியை எட்ட இந்தியா இலக்கு நிர்ணயித்தது.
“2025-26 நிதியாண்டில் 863 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த ஏற்றுமதியை, நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் 570 பில்லியன் அமெரிக்க டாலராக எட்டியுள்ளோம். எஞ்சிய 430 பில்லியன் அமெரிக்க டாலர் இலக்கையும் அடுத்த ஐந்து மாதங்களில் அடைவோம்,” என்று திரு கோயல் உறுதியளித்தார்.
