புதுடெல்லி: வெளிநாடுவாழ் இந்திய வம்சாவளியினருக்கு இந்தியா வழங்கும் நிரந்தர விசாவான ‘ஓசிஐ’ அனுமதி அட்டையை இனிமேல் அதிகமான இலங்கைத் தமிழர்கள் பெறலாம்.
மத்திய உள்துறை அமைச்சு பத்தாண்டுகளுக்குப் பிறகு இந்தத் திட்டத்தில் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது.
புதிய விதிகளின்படி, இலங்கையைச் சேர்ந்த ஐந்தாவது ஆறாவது தலைமுறை இந்திய வம்சாவளித் தமிழர்கள் ‘ஓசிஐ’யை அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கு முன்பு நான்காம் தலைமுறைவரை மட்டுமே இந்தத் தகுதி வழங்கப்பட்டிருந்தது.
வரலாற்று ஆவணங்கள் குறைவாக உள்ள இலங்கைத் தமிழ்ச் சமூகத்தினருக்கு இந்த விரிவுபடுத்தப்பட்ட தகுதி வரம்பு மிகுந்த நன்மை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஓசிஐ’ அட்டைக்கு விண்ணப்பிப்பவர்கள் அதற்கு முன்னதாக இந்தியாவில் ஆறு மாதங்கள் தங்கியிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இனிக் கிடையாது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இது நிர்வாகத் தாமதங்களைக் குறைத்து, வெளிநாட்டினர் எளிதாக இந்தியா வந்து செல்ல வழிவகை செய்யும்.
அபராதம், பயோமெட்ரிக் முறை
‘ஓசிஐ’ அட்டைதாரர்கள் புதிய கடப்பிதழ் பெற்ற மூன்று மாதங்களுக்குள் அதன் விவரங்களை ஓசிஐ இணையத்தளத்தில் புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் 25 அமெரிக்க டாலர் (அல்லது அதற்கு இணையான தொகை) அபராதமாக விதிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
இந்திய விமான நிலையங்களில் ‘இ-கேட்’ (e-gate) மூலம் விரைவான குடியேற்றச் சோதனைகளை மேற்கொள்ள ஏதுவாக பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. கடப்பிதழ், ‘ஓசிஐ’ தரவுகளை நிகழ்நேரத்தில் ஒப்பிட்டுப் பார்க்க இது உதவும்.


