புதுடெல்லி: தற்காப்புத் தளவாட ஏற்றுமதியில் இந்தியாவின் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தற்காப்புத்துறையில் வெளிநாடுகளை நம்பியிருந்த இந்தியா, அந்நிலையை மாற்றி தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது. உள்நாட்டிலேயே ஆயுதங்கள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது அந்த இலக்கின் ஓர் அங்கமாகும்.
அதன்படி, இந்தியாவிலேயே ஏராளமான ஆயுதங்கள், தளவாடங்கள், ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, அவை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
இந்நிலையில், இந்தியாவின் தற்காப்புத் தளவாடங்கள் ஏற்றுமதி மதிப்பு ரூ.23,622 கோடியாக அதிகரித்து உள்ளது என்று மத்திய தற்காப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த நிதியாண்டில் மட்டும் வெடிமருந்துகள், ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்கள் சார்ந்த துணை அமைப்புகள் ஆகியற்றை 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
கடந்த 2024 - 2025ம் நிதியாண்டில் ஆயுதக் கொள்முதல் தொடர்பாக, 1,762 விண்ணப்பங்கள் வந்து உள்ளன என்றும் இது முந்தைய நிதியாண்டை காட்டிலும் 16.92 விழுக்காடு அதிகம் என்றும் தற்காப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2029ம் ஆண்டிற்குள் தற்காப்பு ஏற்றுமதிக்கு ரூ.50 ஆயிரம் கோடி இலக்கு என்பதை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
“இந்தியாவின் தற்காப்பு ஏற்றுமதி ரூ.23,622 கோடியாக அதிகரித்து உள்ளது. இது 2023-2024ம் நிதியாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட ரூ.21,083 கோடியைக் காட்டிலும் 12%, (ரூ.2,539) அதிகமாகும்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
தற்காப்பு உற்பத்தியில் தன்னிறைவு மற்றும் உலகளாவிய தலைமைத்துவத்தை நோக்கிய பயணத்தில் இது பெருமைமிக்க தருணம் என்று பிரதமர் மோடியும் பாராட்டியுள்ளார்.