புதுடெல்லி: தன் நாட்டிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவரை 24 மணி நேரத்திற்குள் நாட்டைவிட்டு வெளியேறும்படி இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுப்பயணிகள் பலரைப் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதை அடுத்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்தது.
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட விசாவை ரத்துசெய்து, உடனடியாக அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறும்படி இந்தியா உத்தரவிட்டது. அத்தகைய நடவடிக்கையைப் பாகிஸ்தானும் எடுத்தது. மேலும் பல ஒப்பந்தங்களும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரிலும் இந்தியா ராணுவத் தாக்குதலை மேற்கொண்டது. பதிலுக்கு பாகிஸ்தானும் ராணுவ நடவடிக்கையை எடுத்தது. இதில் இருதரப்பிலும் உயிருடற்சேதங்கள் ஏற்பட்டன.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தலையிட்டதை அடுத்து, இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு உடன்பட்டன.
இந்நிலையில், இந்தியாவில் செயல்பட்டுவரும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை 50லிருந்து 35ஆக இந்திய அரசு குறைத்துள்ளது.
இதனிடையே, டெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்துவரும் அதிகாரி ஒருவரை 24 மணிநேரத்திற்குள் நாட்டைவிட்டு வெளியேறும்படி இந்தியா உத்தரவிட்டுள்ளது.
தூதரக நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு அவர் வேறு பணிகளை மேற்கொண்டதால் அவரை வெளியேற உத்தரவிட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. அவரது பெயர் உள்ளிட்ட விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

