புதுடெல்லி: ரஷ்யத் தயாரிப்பான மிக்-21 வகை போர் விமானங்களை வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து கட்டம் கட்டமாகச் சேவையிலிருந்து அகற்ற இந்திய விமானப் படை திட்டமிட்டுள்ளது.
அதற்குப் பதிலாக, இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் இலகுவகை போர் விமானமான தேஜஸ் மார்க்-1ஏ சேவையில் இணைக்கப்படவுள்ளது.
கடைசியாக 2023 அக்டோபர் மாதத்தில் இடம்பெற்ற வருடாந்தர விமானப் படை நாள் அணிவகுப்பில் மிக்-21 விமானங்கள் பங்கேற்றன. அப்போதே அவ்வகை விமானங்களைச் சேவையிலிருந்து அகற்ற காலக்கெடு வகுக்கப்பட்டது.
“2025ஆம் ஆண்டிற்குள் மிக்-21 விமானங்களைச் சேவையிலிருந்து நிறுத்திவிட்டு, தேஜஸ் மார்க்-1ஏ விமானங்களை இணைப்போம்,” என்று அப்போதைய விமானப் படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் வி ஆர் சௌத்ரி தெரிவித்திருந்தார்.
இப்போது இந்திய விமானப் படையிடம் 36 மிக்-21 விமானங்கள் உள்ளன. முன்னதாக, 870க்கும் மேற்பட்ட மிக்-21 விமானங்கள் அதனிடம் இருந்தன. அவற்றுள் ஏறத்தாழ 600 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை.
முதன்முறையாக 1963ஆம் ஆண்டு சோதனை அடிப்படையில் மிக்-21 விமானம் இந்திய விமானப் படையில் இடம்பெற்றது. அதன்பின் விமானப் படையின் முதுகெலும்பாக அவ்விமானங்கள் விளங்கின.
மிக்-21 விமானங்கள் விபத்தில் சிக்குவது தொடர்கதையான நிலையில், அவற்றைச் சேவையிலிருந்து அகற்ற முடிவெடுக்கப்பட்டது. கடந்த 2023 மே மாதம் ராஜஸ்தானில் நேர்ந்த அப்படியொரு விபத்தில் கிராமவாசிகள் மூவர் கொல்லப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, இந்திய விமானப் படை மிக்-21 விமானங்கள் அனைத்தையும் இயக்காமல் நிறுத்திவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
கடைசியாக விடைபெற இருப்பவை ‘பைசன்’ வகை விமானங்கள் என்றும் அவை மேம்படுத்தப்பட்ட மின்னணு, பயண, தொடர்பு அம்சங்களைக் கொண்டவை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை உருவாக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. அத்தகைய நவீன போர் விமானங்கள் மேலும் மூன்று நாடுகளிடம் மட்டுமே உள்ளதாகச் சொல்லப்படுகிறது. அவற்றில் பெரும்பாலானவை இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்றும் அதற்கு ரூ.15,000 கோடிக்கு (S$2.248 பில்லியன்) மேல் செலவாகும் என்றும் கூறப்படுகிறது.