புதுடெல்லி: மீண்டும் கென்யாவிலிருந்து கூடுதலான சிறுத்தைகளைத் தருவிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
உலகின் நிலநடுக்கோட்டுக்கு மேல் இருக்கும் கென்யாவின் பருவநிலை, இந்தியாவின் பருவநிலையைப் போன்றிருக்கும்.
தென்னாப்பிரிக்கா, நமீபியா போன்ற நிலநடுக்கோட்டுக்குக்கீழ் உள்ள நாடுகளிலிருந்து இந்தியா சிறுத்தைகளைத் தருவிப்பதில் இடையூறுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட சிறுத்தைகளில் சில மாண்டன.
சிறுத்தைகளைத் தருவிப்பதன் தொடர்பில் இந்தியா, கென்யாவுடன் புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட ஒப்புக்கொண்டுள்ளது. அந்தப் புரிந்துணர்வுக் குறிப்பு ஆவணத்தின் ஆரம்ப வடிவம் சரிபார்க்கப்படுவதற்காக இந்தியாவின் வெளியுறவு அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தியா, கென்யாவிலிருந்து எட்டு முதல் 10 சிறுத்தைகள்வரை தருவிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இதன் தொடர்பில் கென்யா அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதால் கடந்த பிப்ரவரி மாதம் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தியாவில் உள்ள சிறுத்தைகள் அதிக எண்ணிக்கையில் மரணமடைவது அந்நாட்டுக்குப் பிரச்சினையாக இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், இந்தியாவில் சிறுத்தைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
உதாரணமாக, 80 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட காந்தி சாகர் காப்பகத்தைச் சுற்றி மத்தியப் பிரதேச அரசாங்கம் தடுப்புகள் போட்டுள்ளது.

