தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கவும் கண்காணிக்கவும் 150 புதிய செயற்கைக்கோள்கள்: இந்தியா திட்டம்

2 mins read
873ced7c-07ee-426b-9167-96dd05d724dc
இஸ்ரோ தலைவர் நாராயணன். - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு, கடலோரக் கண்காணிப்பை மேம்படுத்த இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) மேலும் 100 முதல் 150 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் இது சாத்தியமாக்கப்படும் என்றும் ஏற்கெனவே செலுத்தப்பட்ட 55 செயற்கைக்கோள்கள் இப்பணிகளுக்குப் போதுமானதாக இல்லை என்றும் இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.

நாட்டின் விரிவான எல்லைகள், 7,500 கிலோமீட்டர் கடற்பரப்பைக் கண்காணிக்க கூடுதல் வசதிகளும் செயற்கைக்கோள்களும் தேவைப்படுவதாக அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது குறிப்பிட்டார்.

காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரோவின் நடவடிக்கைகள் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

அப்போது, செயற்கைக்கோள் திறன்களை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை திரு நாராயணன் மீண்டும் வலியுறுத்தினார்.

“காலநிலை மாற்றத்தை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு செயற்கைக்கோளை உருவாக்குவதில் விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர். ஜி20 நாடுகளுக்காக இந்தத் திட்டம் செயல்படுகிறது.

“அந்த செயற்கைக்கோள் சுமக்கும் இயந்திரங்களில் சுமார் 50% இந்தியாவால் உருவாக்கப்படும், மற்ற பேலோடுகள் இதர ஜி20 நாடுகளில் இருந்து வரும்,” என்றார் நாராயணன்.

மத்திய விண்வெளித் துறையின் செயலாளராகவும் பொறுப்பு வகிக்கும் நாராயணன், குறிப்பிட்ட சில காரணங்களால் பிரதமர் மோடி விண்வெளித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார் என்றார்.

இதன் மூலம் உந்துகணை, செயற்கைக்கோள்களை உருவாக்குவதில் தனியார் நிறுவனங்களின் பங்கேற்பை இந்தியா அனுமதிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், பாதுகாப்பு குறைபாடுதான் பஹல்காம் தாக்குதலுக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இந்நிலையில், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பேசிய மத்திய அமைச்ர் பியூஷ் கோயல், “140 கோடி இந்தியர்கள் தேசப் பற்றை உயரிய கடமையாக கருதும் வரை, பஹல்காம் தாக்குதல் போன்ற நாட்டை உலுக்கும் சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும்” என்று தெரிவித்த கருத்து பல்வேறு விவாதங்களை எழுப்பி உள்ளது.

குறிப்புச் சொற்கள்