டேராடூன்: காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவரைப் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகக் கூறி, 32 வயதுக் காவலர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில் இந்த அதிர்ச்சிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்த 33 வயதுப் பெண் அதிகாரி எட்டு மாதங்களுக்குமுன் டேராடூனுக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டதாகத் தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
“அப்பெண்ணின் பணியிடம், அவரது சொந்த ஊரிலிருந்து வெகுதொலைவில் உள்ளது. பணியில் சேர்ந்த தொடக்கத்தில், ஒருமுறை பணிக்குத் தாமதமாக வந்ததால் மூத்த அதிகாரிகள் அவரைக் கடிந்துகொண்டனர். அவ்வாறு மீண்டும் நடக்காதிருக்க, மறுநாள் முக்கியமான வேலை இருந்ததால் முதல்நாள் இரவு அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்க முடிவுசெய்தார். அதனைத் தொடர்ந்து, தமக்குக் கீழ் பணியாற்றிய ஆண் காவலர் ஒருவரிடம் அந்த ஹோட்டலில் அறை முன்பதிவு செய்யச் சொன்னார்.
“முன்பதிவு செய்தபின் அவருடன் அந்த ஹோட்டலுக்குச் சென்றார் அந்த ஆண் காவலர். பின்னர் அறையைச் சோதிப்பதுபோல் உள்ளே நுழைந்த அவர், உள்ளே சென்றதும் கதவைத் தாழிட்டு, அப்பெண் அதிகாரியைச் சீரழித்தார்,” என்று காவல்துறைப் பெண் அதிகாரி ஒருவர் விளக்கினார்.
அதனைத் தமது கைப்பேசியில் பதிவுசெய்த அந்த ஆடவர், அதனைக் காட்டியே அப்பெண்ணை மேலும் பலமுறை தமது ஆசைக்கு இணங்க வைத்ததாகச் சொல்லப்படுகிறது.
அதுகுறித்து வெளியில் சொல்லாமல் மௌனம் காத்த அப்பெண் அதிகாரி, துணிச்சலுடன் கடந்த வியாழக்கிழமை (மார்ச் 13) காவல்துறையில் புகார் அளித்தார்.
இருப்பினும், இன்னும் அந்த ஆண் காவலர் கைதுசெய்யப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
“பெண் அதிகாரி தமது புகாரில் குறிப்பிட்டுள்ளது உண்மைதானா என்பதைச் சரிபார்ப்பதற்காக, கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான காணொளி உள்ளிட்ட ஆதாரங்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளோம். குற்றமிழைத்திருந்தால் அந்த ஆண் காவலர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று விசாரணையை மேற்பார்வை செய்யும் காவல்துறைக் கண்காணிப்பாளர் ரேணு லோகானி தெரிவித்துள்ளார்.